ஓவியங்களில் கரையும் தூரிகை

இளங்கோ மன்றத்தின் நகர்வுகளில் தூரத்தில் இருந்தே தன் கலை உணர்வுகளால் வழிகாட்டிய அன்பின் தோழர், எழில்மிகு ஓவியர் கார்த்திகா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அவர்தான் நம் மன்றத்தின் சின்னத்திற்கு வடிவம் கொடுத்தார். சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி கண்ணகியின் காற்சிலம்பை முன் வைத்து, வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் இயக்கம் என்பதால், மிக நேர்த்தியான ஓர் சின்னத்தை கையாலே வரைந்து நம் இளங்கோ மன்றத்திற்கு பரிசளித்தார். குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டியதன் பின்னால் உள்ள குழந்தைகளுக்கான உளவியல் நலன்குறித்து எடுத்துக்கூறி அப்படியான ஓவியப் போட்டிகளை நாம் நடத்துவற்கு தூண்டுகோலாக இருந்தார்.

ஓவிய ஆசிரியராக குழந்தைகளோடும், ஓவியங்களோடுமே நிறைய பயணிக்கும் அவர், நாம் நம் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றால், அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு டிராயிங் புக்கும், சில ஸ்கெட்சஸும், பெயிண்ட் பிரஷும் வாங்கிக் கொடுத்தால் அந்தக் குழந்தைகள் அவ்வளவு மகிழ்வார்கள் என்று சொல்வார். அதற்கு காரணம் வண்ணங்கள் என்றால் குழந்தைகள் அதிகமாக மகிழ்வார்கள் என்று கூறுவார். அதுவும் அழகுதான் இல்ல, நானும் என் அக்கா குழந்தைகளுக்கு அப்படி வாங்கித்தர எண்ணி இன்னும் வாங்கித்தரவேயில்லை. பிள்ளைகள் "மாமா நீ ஸ்கெட்ச் வாங்கித்தாறேன்னியே எங்கன்னு ஊருக்கு போற ஒவ்வொருதடவையும் வம்பு இழுப்பார்கள்" ஆர்த்தியும் நிறைமதியும்.

ஓவியர் கார்த்திகாவின் திறமைக்குச் சான்றாய், நம் மன்றம் வெளியிட்ட தோழர் இரா.த.கண்ணதாசனின், குருதி குடிக்கும் போதிமரங்கள் கவிதை நூலுக்கு அவர்தான் அட்டைப்படம் வரைந்தார். சென்னை புத்தகக் கண்காட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் அந்த நூலை வைத்திருந்தபோது, பல எழுத்தாளர்களும் வந்து இந்த அட்டைப்படம் அழகாய் இருக்கிறது என்று பாராட்டினார்கள். தற்போதுகூட நம் மன்றம் பிப்ரவரியில் வெளியிட இருக்கிற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொண்டிருக்கிறார்.

குட்டி ஆகாயம், பஞ்சு மிட்டாய் போன்ற நிறைய சிறுவர் இலக்கிய இதழ்களில் குழந்தைகளின் கதைகளுக்கு ஓவியம் தீட்டி வருகிறார். பொன்னோ, பொருளோ, நகையோ, பணமோ பெரிதில்லை ஓவியங்களும், குழந்தைகளும், அவர்களோடு வரைதல் தொடர்பாக கொஞ்சு மொழியில் கதைப்பதே தனக்கு விருப்பம் என எப்போதும் சொல்வார்.

நிறைய புத்தகங்களை வாசித்து வாசித்து மீள்கிறார். அவர் ஒரு மிகச் சிறந்த புத்தக வாசிப்பாளரும்கூட, மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான " கதை கேட்கும் சுவர்கள்", சு.வேணுகோபாலின் சிறுகதைகள், மாரி செல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், சு.வெங்கடேசனின் வேள்பாரி, வைக்கம் முகமது பஷீரின் பால்யகால சகி, ஜெயகாந்தனின் ஒரு வீடு, ஒரு மனிதன் ஒரு உலகம், பூலான்தேவியின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கரின் நூல்கள் ஆகியவற்றை அவர் படித்துவிட்டு அந்த நூல்கள் தொடர்பாக முன் வைக்கும் கருத்துக்கள், அவருடைய பார்வை அத்தனை கூர்மையானதாகவும், வலிமையானதாகவும் இருக்கும்.

தன் சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் விருப்பம் கொண்ட அவர் தற்போது, சமூக, பெண்ணியக் கட்டுரைகளும், சிறார்களுக்கான கதைகளை எழுதியும் வருகிறார். அவர் ஒரு சிறந்த கதை சொல்லியாகவும் திகழ்கிறார். கூடுதல் சிறப்பாக தற்போது தமிழக அரசின் பாட நூல்களுக்கும் தன் ஓவியங்களை வரைந்து வருகிறார். வேள்பாரி நாவலில் ஓவியங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு இப்படி ஒரு நூலுக்கு, ஓவியங்களை வரைந்துவிட வேண்டும் என தன் ஆசையாக சொல்கிறார்.

தாமிரபரணி நதிக்கரையில் தமிழ் பயின்று, வைகைக் கரையில் கல்லூரி கற்று, ஓவியத்துறையில் தனக்கென ஓர் தனி இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தோழர் கார்த்திகா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய புத்தகங்களுக்கு ஓவியம் தீட்டி குழந்தைகளின் மனம் ஆளும் ஓவியராக தமிழ்ச் சமூகத்தில் வலம்வர அவரை இளங்கோ மன்றம்  பாராட்டி மகிழ்கிறது. ஒருமுறை மதுரை புத்தகக் கண்காட்சியில் தோழர் Agalya Saba , எழுத்தாளர் ராஜா நர்மி  ஆகியோர் சூழ சந்தித்தோம். அதன்பிறகு சந்தித்து நேரில் இலக்கியம் பேசி நாட்கள் பல ஆகிறது. மணப்பாறை ஒருநாள் வாங்க தோழர் குழந்தைகளுக்கு ஓவியங்கள் தொடர்பா ஒருநாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்வோம். இன்னும் பிரம்மாண்டமாய் ஒரு ஓவியப்போட்டி நடத்திடுவோம். வாழ்த்துக்கள் தோழர்.

- பாரதி கனகராஜ்
04.12.2021

Comments

Popular Posts