"மெஹந்தி சர்க்கஸ்" அழியாத காதல் காவியம்

2019 ஏப்ரல் மாதம், கரூரில் கவிஞர் யவனிகா சாந்தி கவிஞர் கலைவாணி தங்கவேலு  ஆகியோர் எழுதிய இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். கவிதை மன்றம் கரூர் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசி முடித்தபின் அன்றிரவு அருகிலிருந்த திண்ணப்பா திரையரங்கிற்கு நண்பர்கள் பாலாஜி இனியன், கவிஞர் ராஜா,  குரு , ஆகியோர் உடன்  திரைப்படம் பார்க்கச் சென்றோம்.

யுகபாரதி அண்ணனின் நடைவண்டி நாட்கள் புத்தகம் படித்ததிலிருந்து அவரின் நண்பரான சரவணன் அண்ணனின் மிகத் தீவிரமான ரசிகன் ஆகியிருந்தேன் நான். பின்னர்தான் தெரிய வந்தது. அந்த சரவணன் அண்ணனின் தம்பிதான் இயக்குனர் ராஜூ முருகன் என்று. ராஜூ முருகன், தன் அண்ணனுக்குப் பிறகு சினிமா உலகத்திற்குள் வந்து குக்கூ, ஜோக்கர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ராஜூ முருகனின் கதை மற்றும் வசனத்தில் , சரவணன் அண்ணனின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் மெகந்தி சர்க்கஸ் என்ற படம் வெளிவரப் போகிறது என்ற செய்தி வெளியான நாளிலிருந்தே நான் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன். 

பரிசல் சிவ.செந்தில்நாதன் அண்ணன் கூட பல நேரங்களில் சரவணன் அண்ணன் எப்போது படம் எடுப்பார் என பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆவலோடு சொல்ல கேட்டிருக்கிறேன். அன்று கரூர் திண்ணப்பா திரையரங்கில் நண்பர்களோடு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் போடுவதற்கு கொஞ்ச நேரம் இருக்கவே கரூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு சாலையோர சிற்றுண்டிக் கடையில் நண்பர்கள் இட்லி, தோசை, ஆம்லேட் வாங்கித் தந்தனர். எனக்கோ  சரவணன் அண்ணனின் இயக்கத்தில் வெளிவந்த படத்தைப் பார்க்கப் போகும் ஆர்வம் , தோழர் இனியனையும், குருவையும் படத்திற்கு கூட்டிப்போக அரசியல் பண்ணி ஒத்துக்க வெச்சிட்டேன். ஆனால் கவிஞர் ராஜா வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடே படம் பார்க்க எங்கள் உடன் வந்தார். திண்ணப்பா திரையரங்கில் சென்றமர்ந்தோம்.

மகாராஷ்டிராவில் மெகந்தி வீட்டில் கதை தொடங்கி கொடைக்கானல் பூம்பாறையில் , இளையராஜாவின் இசைத்தட்டுக்களை விற்கும் ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வரைக்குமாய் கதை நகரத் தொடங்கியது ..படத்தின் டைட்டில் கார்டிலேயே வரும் ஒரு கதைப்பாடல் கேட்க அழகாய் இருந்தது. நாயகி மெகந்தியின் அறிமுகமும், நாயகன் ஜீவாவின் அறிமுகமும் அந்த பூம்பாறை சர்ச் வாசலில் நிகழவே, கத்தி முனையில் அவள் சர்க்கஸ் அரங்கில் நிற்கும் காட்சிகள் திகிலடைய வைத்தன. அடுத்த நாள் ஜீவா மெகந்தியிடம் அப்படி இனிமே நிக்காத எனக்கு ரொம்ப பயமா இருக்கு எனச் சொல்ல, அதே மாதிரி ஊரில் உள்ள எல்லாப் பசங்களும் சொல்ல முற்பட மெகந்தியின் அழகான சிரிப்போடு கூடிய சூழலில் ஷான் ரோல்டனின் இசையில் , யுகபாரதி அண்ணனின் வரிகளில் "வெள்ளாட்டுக் கண்ணழகி " பாடல் நம்மையும் மெகந்தியின்பால் காதல் கொள்ளச் செய்கின்றன. 

ஜீவா ,சர்க்கஸில் இனிமேல் யாரும் அவள்மீது கத்தி வீசக்கூடாது என திட்டம்போட்டு அந்த 9 கத்திகளையும் திருடிவிடுகிறான். பின் அவள் கத்தியை கொண்டுவந்து எடுத்த இடத்திலேயே வைக்கச் சொல்லவும் வைத்துவிடுகிறான். அவர்கள் தனியாக மலையின் தனித்த சுவருக்குப் பின்னால் சந்திக்கும் காட்சியில் " இதெல்லாம் சரிப்பட்டு வராது , நாங்க ஊர் ஊரா சர்க்கஸ் போட்றவங்க இன்னக்கி இங்க இருப்போம். நாளக்கி எங்கயாவது போயிருவோம்" . எனச் சொல்ல ஜீவாவோ "நான் ஒன்னய உட்டுட்டு ஓடிற்வேன்னு பார்க்குறியா" ன்னு கோபப் பட்டுப் பேச மெகந்தி ஜீவாவின் கையை இறுகப் பிடித்துக் கொள்வாள். அந்த இடத்தில் ஒரு பாடல் " 
கோடி அருவி கொட்டுதே அடி ஒம்மேல 
அது தேடி உசுரு ஒட்டிதே அடி எம்மேல 
கண்ண மூடிக் கண்ட கனவே 
பல ஜென்மம்தாண்டி வந்த உறவே" என்ற  அந்தப் பாடல் நம்மை உள்ளுக்குள் என்ன என்னவெல்லாமோ செய்கிறது....
பின்பு மெகந்தியின் அப்பாவான சர்க்கஸின் முதலாளி பெரியவருக்கு இவர்கள் காதல் தெரியவர பூம்பாறை சர்ச் கிரவுண்டில் நடைபெற்றுவந்த அந்த கூடாரத்தை களைத்துவிட்டு சின்னாளப்பட்டி அருகில் சென்று சர்க்கஸ் போடுவார்கள். ஜீவா மெகந்தியைத் தேடி அந்த ஊருக்குப் போவான். அப்போது மெகந்தியின் அப்பா இவன் எங்கே போனாலும் தொடர்ந்து வந்துக்கிட்டேதான் இருப்பான் இதைத்தடுக்க ஒரே வழின்னு " நீ ஒன்பது கத்திய  மெகந்திய நிக்க வெச்சு அவ ஒடம்புல படாம சரியா வீசிட்டேன்னா என் பொண்ணே கூட்டிட்டுப்போன்னு " சொல்லீடுவாரு...

ஜீவா அந்த சர்க்கஸ் கூட்டத்துக்குள்ள இருக்குற ஜாதவையே பிடிச்சு அவனுக்கு சரக்கு வாங்கிக் குடுத்து கரெக்ட் பண்ணி நல்லா கத்தி வீசிப் பழகிட்டுப் போய் அவுங்க அப்பா முன்னாடி நிப்பான். ஆனா அவ அப்பா மறுக்க , மெகந்தி போய் அந்தப் பலகை முன் நின்று "ஜீவா நீ வா வந்து கத்தி வீசு உன்னால் முடியும் "என்பாள். நன்கு பயிற்சி எடுத்திருந்தும் தன் காதலியை நிற்க வைத்து அவள்மீது கத்திவீச இவனுக்கு மனம் வரவில்லை. "நீயே ஒன் மகள வெச்சுக்கயா ஆனா பத்திரமா பார்த்துக்கோ"ன்னு சொல்லிட்டுப் போய்டுவான். ஆனா ஒருநாள் ஜீவாவும் மெகந்தியும் ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி ஜீவாவோட அந்த யமகா பைக்குல கெளம்பி ஒரு இடத்துல போயி தங்குவாங்க. சர்ச் பாதர் சொன்னதன் பேரில் அவரின் முன்னாள் காதலி ஒருவர் தன் வீட்டில் அடைக்கலம் கொடுப்பாங்க. அந்த இடத்த கண்டுபிடிச்சு சாதி வெறி பிடிச்ச ஜீவாவின் தந்தை தன் ஜீப்பில் அடி ஆட்களோடு சென்று சேருவார். மொத்தத் திரைப்படத்தில் சில முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று. அப்போது ஜீவாவின் தந்தை மெகந்தியை அடிப்பதும் தன் செறுப்புக் காலில் மிதித்து " ஊர் ஊராத் திரியுற நாயி ஒனக்கு எம்புள்ள கேக்குதான்னு கேக்குறதும் " ஜீவா ஓடிவந்து அவளை அடிக்காமல் தான் அவள் மேலே விழுந்து தடுக்கும்போது ஜீவாவை அடித்து " வனமெல்லாம் மேய்ஞ்சாலும் இனம் இனத்தோடதான் சேரனும்" என்ற வசனங்களும் இன்றைய சாதிய நிலையின் அவலத்தையும் காதலுக்குச் சுதந்திரமில்லா இந்திய சாதிய மனோ நிலையின் கோர முகத்தையும் நமக்குக் காட்டுகின்றன. 

அந்தக் காட்சியின் முடிவில் அந்த வீட்டுக்குள் தன் குழந்தையை அணைத்தபடி சர்ச் பாதரின் முன்னாள் காதலி பயந்து நடுங்கி உட்கார்ந்திருப்பார். கேமரா சற்றே மேலே செல்லும் , பூம்பாறை சர்ச் பாதர் அந்த அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி ஜீவா- மெகந்தியிடம் கொடுத்தனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் " save the children" என்று எழுதியிருக்கும். இன்னும் கொஞ்சம் கேமரா சற்றே மேலே நகரும் " தந்தை பெரியார், அம்பேத்கர் படங்கள் அந்த வீட்டில் மாட்டியிருக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கதை அம்பேத்கர் பிறந்த மராட்டிய மண்ணுக்கும், பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கும் இடையிலான காதலாக , மொழி கடந்த, மதம் கடந்த , சாதி கடந்த காதலாக வடிக்கப்பட்டிருக்கும்.

அதன்பிறகு மெகந்தியை அழைத்துக்கொண்டு அவள் அப்பாவும் சர்க்கஸ் குழுவினரும் மகாராஷ்டிரம் போய்விடுகிறார்கள். ஜீவாவோ அவளைத் தேடி இந்தியா முழுமைக்குமாய் லாரிகளில் ஏறி ஏறி அலையாய் அலைந்து தேடுகிறான். தேடல் தொலைந்தபின் தன் மியூசிக்கல் கடையின் பூட்டிய  மரக் கதவில் எல்லா நாளும் மெகந்தியை நினைத்து 9 கத்திவீசி பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறான் .அவன் தன் காதலியைத் தேடி அலையும்போது ஒரு பாடல் சரவணன் அண்ணனின் அழகான வரிகளில் வெயில் மழையே மின்னல் பூவே நீ எங்கே என்ற அந்தப் பாடல் ஒலிக்கிறது. அதில் எனக்கு ஒரு வரி ரொம்பப் பிடித்திருந்தது.

"நிலமெங்கும் பறந்து திரிகிறேன் நானும் 
உன்னிடம் வந்து சேர்வேனோ.." என்பதுவே அது...அந்தப் பாடலின் இறுதியில் ஜீவா மைல் கல்லில் சாய்ந்ததைப்போல இருக்கையில் ஒரு வசனம் " நம்பிக்கை பொய்யாகும்போது வருகிற வலி கொடுமையானது. " என்கிற வசனம் உண்மை. மெகந்தி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்றா என்று பொய்யான செய்திய ஜாதவ் சொல்லக்கேட்டு ஜீவா வருத்தம் கொள்வான்.

ஒரு அழகான கதைக்கு திரைக்கதை என்பது ரொம்பவே முக்கியமானது. இந்தப் படத்தின் திரைக்கதைதான் ஆகச்சிறந்த பலம். மெகந்தியின் மகள் தன் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகியிருப்பதை கண்டுணர்ந்து அம்மாவின் காதலனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்துக் கொண்டுவந்து அவள் முன்னால் நிறுத்தினால் கொஞ்சம் குணமடைவாள் என்று எண்ணி மெகந்தியின் மகள் நிஷா மராட்டியத்தில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானல் பூம்பாறைக்குச் சென்று சந்தித்து ஜீவாவை அழைத்துக்கொண்டு மகாராஷ்டிரா திரும்புகிறாள். அப்போது வழி நெடுகிலும் அந்தக் காரின் பயணத்தில் ஜீவா தன் காதலியின் மகளான நிஷாவிடம் தனக்கும் அவளின் அம்மாவுக்குமான காதல் கதையைப் பற்றி ஜீவா சொல்லிக் கொண்டே வருகிறான். 

ஒரு இடத்தில் காரை நிறுத்தி அவன் தம் அடிக்கும்போது நிஷா மிக அழகாய் ஒரு வசனம் சொல்லுவாள் " மனசுல வாழ்றவந்தான் புருசன், உடம்புக்காக வர்றவன் இல்ல" என்று..நல்லாருக்கும். ஜீவா அந்த மராட்டிய மாநிலத்தின் ஒரு வனாந்திரக் கிராமத்தில் மெகந்தியின் வீட்டு முன்னால் சென்று நிற்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மெகந்தியைப் பார்க்கப் போகிறான். அப்போது ஷான் ரோல்டன் ஒரு புல்லாங்குழல் இசையை ஓடவிட்டிருப்பான் மனுசன். அது 
"நிலமெங்கும் பறந்து திரிகிறேன் நானும் 
உன்னிடம் வந்து சேர்வேனோ"என்ற வரிகள் மறைந்த அதே இசை....

ஜீவா வீட்டுக்குள் செல்வான், மெகந்தியைப் பார்ப்பான், அய்யோ...இருவரும் கரம் பற்றிக் கொள்வார்கள். ஒரு காதலன் தன் காதலியை கண்டடையத்தான் எத்தனை போராட்டம். மெகந்தியோ "வா போகலாம்" என்பாள். எங்கே என்று அவனுக்குத் தெரியாது . கரம் அணைத்து அழைத்துச் செல்வாள். அந்த இரவுப் பொழுதில் அன்று திருவிழா நடக்கும் அவளின் ஊர் நடுவில் அவள் ஒரு மேடையில் சென்று நிற்பாள் . மெகந்தியின் பின்னால் குறி பார்த்து கத்தி வீசுவதற்கான பலகையை வைக்கிறார்கள். நிஷா ஜீவாவிடம் 9 கத்திகளைக் கொடுக்கிறாள். 

அந்தத் திருவிழாக் கூட்டமே அமைதியாகி இவர்களைக் கண்டு அமைதியில் உறைகிறது. மெகந்தி தேவதையைப்போல இரண்டு கைகளையும் விரித்தபடி அந்தப் பலகையின் அருகில் நிற்க , சற்று தொலைவில் இருந்து ஜீவா வரிசையாக கத்தி வீசத் தொடங்குவான். 8 கத்திகளையும் மிகச் சரியாக வீச வீச ஊரே ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்து நிற்கும் , 9 வது கத்தி வீசும் முன் மெகந்தியின் அப்பாவின் தோளில் இருக்கும் துண்டை எடுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு ஜீவா கத்தி வீசுவான். மிகச் சரியாய் மெகந்தியின் தலையின் மேலாப்பில் சென்று பலகையில் சொறுகும். கூட்டமே கைதட்டி ஆரவாரிக்கும்.. மெகந்தியின் தந்தையும் பெரும் ஆச்சர்யத்தில் பார்ப்பார்.

மெகந்தி அப்படியே அந்தப் பலகையில் கைகளை விரித்தபடி ஆச்சர்யத்தோடு நிற்பாள் . ஜீவா அவள் அருகே சென்று அவளை கத்திகளிலிருந்து வெளியே இழுத்து மெகந்தியின் இரு கண்ணங்களையும் பற்றியபடி அவள் நெத்தியில் ஒரு முத்தம் இடுவான்....

Written & directed by 
Saravana Rajenthiran என்று திரையில் இயக்குனரின் பெயர் ஓடும். ஒரு அழியாத காதல் காவியமாக அந்தப் படம் என் நெஞ்சில் பதிந்தது. எங்கே போவதென்று விலாசம் தெரியாமல் யுகபாரதியோடு தஞ்சாவூரிலிருந்து கிளம்பி சென்னை வந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு சரவணன் அண்ணன் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். 
அன்று கரூர் திண்ணப்பா திரையரங்கில் நண்பர்களோடு " மெகந்தி சர்க்கஸ் திரைப்படம் பார்த்தது ஓர் அழகான அனுபவம். அறிமுக நடிகராக மாதம்பட்டி ரெங்கராஜ், ஸ்வேதா திரிபாதி ஆகியோர்   தமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி சர்ச் பாதராக மிக நேர்த்தியாக நடித்திருப்பார். ஒரு இடத்தில் ஜீவாவுக்கு அறிவுரை வழங்கும்போது "எல்லாரோட தலைக்குமேலயும் ஒரு கத்தி தொங்குதுடா , ஒங்க அப்பாவுக்கு சாதி, ஒங்க அம்மாவுக்கு வாத்து , எனக்கு ஏசப்பா, ஒனக்கு மெகந்தி காதல். " என்று சொல்லுவார். 

சர்ச் பாதர் இறக்கும்போது ஜீவா ஓடிப்போயி அவர் எப்போதும் முத்தமிடும் அவரின் முன்னாள் காதலியின் லேடீஸ் வாட்ச்சை எடுத்து வந்து அவரின் கையில் கட்டிவிடுவான். அந்த தேவாலயத்தில் அனைவரும் அதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜீவா அவரின் சவப் பெட்டியைத் தூக்கிப்போகும்போது " கர்த்தர் அனைவரையும் அன்பு செய்யச் சொல்லியிருக்கிறார்" என்று பாதர் ஏற்கனவே சொன்னது நம் நினைவில் வந்து போகும்.

ஆம் நண்பர்களே காதல்தான் மனிதகுலத்தையே ஆசீர்வதிக்கிறது . யாருக்கு இல்லை காதல். எல்லாவற்றிலும் நீக்கமற  நிரம்பி  இருக்கிறது காதல். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நெட் பிளிக்ஸில் சென்று உடனே பாருங்கள்...நான் இன்று இரண்டாவது முறையாக நெட் பிளிக்ஸில் படத்தை பார்க்கவே இத்தகையதொரு பதிவை எழுத நேரிட்டது. ஒரு நல்ல படத்தை வெகுவாக நாம் கொண்டாடத் தவறிவிட்டோம். பரவாயில்லை இப்போதும் எப்போதும் கொண்டாடுவோம். மெகந்தி சர்க்கஸ் என் வாழ்வில் நான் பார்த்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் என்று இனி யார் கேட்டாலும் சொல்லத்தான் போகிறேன்.

பாரதி கனகராஜ் 
14.05.2020 
@11.00 pm

Comments

  1. Very nice experience Bharathi Kanagaraj. Beautiful word used.

    I am remembering the movie once again with your words.

    Congraturations.

    ReplyDelete
    Replies
    1. பேரன்பு அண்ணா..என் வலைப்பூவில் வந்த முதல் கருத்திடல் செய்தவர் நீங்கதான் அண்ணா...

      Delete

Post a Comment

Popular Posts