சிறிது வெளிச்சம்- எஸ்.ராமகிருஷ்ணன்


"சிறிது வெளிச்சம்" என்ற தலைப்பில் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 15.04.2017  அன்று ஒரு பொன்மாலைப் பொழுதில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாநாட்டு அரங்கத்தில் பேசத் துவங்கினார்...

அப்போது அவர் பேசியதாவது,

"நம் வரலாறு நமக்குத் தெரிந்தே நம்மாலேயே மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்க வேண்டுமென சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவருடைய நினைவு நாளில் நாம் ஒரு மெழுகுவர்த்தி ஏந்தியோ , அவருடைய நினைவிடம் சென்று பூக்களைத்தூவியோ நம்மில் எத்தனைபேர் நன்றிப் பெருக்கோடு நினைத்துப் பார்க்கிறோம்?

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தவர் பூபேஷ்தாஸ் குப்தா என்கிற ஒரு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

அப்போது அத்தீர்மானத்தை நம் மதராஸ் மாகாண எம்.பிக் கள் அனைவரும் எதிர்த்தார்கள். பேரரிஞர் அண்ணாதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவோம் என்று முழங்கினார்..ஆட்சியைப்பிடித்ததும் அதையே செய்தார்.

தற்போது அரசிடம் முறையிட சங்கரலிங்கனாருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது...அதை எம்மைப் போன்ற எழுத்தாளர்கள் அரசுக்கு தொடர்ந்து நினைவூட்டியுள்ளோம்..

ஒரு எழுத்தாளனாக இந்தச் சமூகத்திற்கு நான் ஏதேனும் செய்துள்ளேன் என்றால் அது மனிதர்களை மனிதர்களோடு ஒன்றிணைப்பதும் ,மனிதர்கள் மறந்துபோனதை அவர்களுக்கு நினைவூட்டுவதும்தான்.

இந்த உலகம் அன்பு செலுத்துவதால் இயங்குகிறது. எல்லா விழாக்களிலும் ஏன் உணவு பரிமாறப்படுகிறது.
உணவுதான் அன்பை, அக்கறையை வெளிக்காட்டுகிறது.

ஒரு கவளம் அதிகமாகச் சாப்பிட்டால் உணவு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.நம் வீட்டில் மனைவிக்கு அது தெரியும்.

எல்லாத் துயரங்களுக்குப் பிறகும் மனிதன் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான்.

உங்களுக்கு உணவு கொடுப்பவர்களை ஒருபோதும் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

தமிழிலக்கியம் முழுவதும் பெண்களின் துயரத்தைப் பேசுகிறது , பிரிவைப் பேசுகிறது. அன்றும் இன்றும்
வீட்டை உருவாக்குவதுதான் பெண்ணின் வேலையாக, பெரிய பொறுப்பாக இருக்கிறது.

வெறும் செங்கல்லும்,சிமெண்டால் ஆன அறைகளை உயிரூட்டமுள்ள வீடுகளாக மாற்றுபவள் பெண்ணாக இருக்கிறாள்.

"அவளுக்கென்று ஒரு வீடு" என்று நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன்...
அதில் ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு கட்டுவதே பெருங்கனவாக இருக்கும். திருமணமாகி அவள் கணவர் மதுரையில் பணி செய்வார். இவள் சென்னையில் பணி செய்வாள்..பேப்பரில் வரும் வீடு வாடகைக்கு விளம்பரங்களைப் பார்த்துப் பார்த்து அங்கு சென்று சென்று பார்த்துவிட்டு ஏதேனும் ஒரு காரணம் சொல்லிவிட்டு வந்துவிடுவாள்..

அப்படியாக அவள்பார்த்த ஒரு வீடு மிகவும் பிடித்துப்போக  அந்த வீட்டை தான் ஒருத்திக்கு மட்டுமாய் வாடகைக்கு எடுப்பாள்...

தான் மட்டும் அந்த வீட்டிற்குச் சென்று ஒரே ஒரு ஊதுபத்தியை மட்டும் கொழுத்தி வைச்சுட்டு, ஏதேனும் இசைத்தட்டுகளில் பாடலை இசைக்க
அவ்வீட்டில் இருக்கும் அழகிய ஊஞ்சலில் கால்களை ஆட்டியபடி கேட்டு இரசிப்பாள்..

அவளுடைய ஸ்கூட்டியில் அடிக்கடி சென்று வருவாள்.அந்த வீட்டில் இருக்கும் பெரிய பாத் டப் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒருமுறை அவளது சிறுவயது மகளை அழைத்துச் செல்வாள். இதுல யாரும்மா இருக்கா? என்று மகள் கேட்பாள். நான் மட்டும்தாண்டா என அவள் பதில் சொல்வாள். உனக்கு எதுக்கும்மா இன்னொரு வீடு?..என மகள் கேட்பாள்..

ஏன் அப்பா மட்டும் அங்கே தனியாதான அறை எடுத்து தங்கிருக்காரு...நான் இருக்கக் கூடாதா? என்று கேட்பாள் அம்மா...

பின்னர் கணவனுக்கு இது தெரியவர " அந்த வீட்டில எவன்கூடடி இருக்க?" எனக் கேட்பான்.

"சம்பாதிக்குற துமுறலதான ஆடுற இனி சம்பளத்தை எல்லாம் எங்கிட்ட குடு, அந்த ஸ்கூட்டிய நீ இனி எடுக்கவே கூடாது பஸ்ல போ...பஸ்ல வா... "என்று உரிமைகளைப் பறித்துவிடுவான்.

அவள் அதன் பிறகும் அவ்வப்போது தெரியாமல் அந்த வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுவருவாள்...

இப்போது வேறு யாரோ அந்த வீட்டில் குடி இருக்கிறார்கள்.

தூரத்தில் நின்று பார்த்திவிட்டு, பிடித்த யாரோ ஒருவரின் மரணத்திற்கு வந்துவிட்டுத் திரும்புவதுபோல் திரும்புகிறாள்.

பெண்களுக்கென நம் வீடுகளில் தனி அறை இல்லை...

இன்றைக்குப் புதிய ஆண்கள் உருவாகிவிட்டார்கள்.புதிய பெண்கள் உருவாகிவிட்டார்கள்.

தமிழ் இலக்கியத்தில் அன்று, நட்பை மதித்தார்களே தவிர நண்பர்களின் இறப்புக்கு அழுது, ஒப்பாரி வைத்ததாக பதிவு இல்லை. ஆனால் இன்று ஒரு மகள்கூட என் அப்பா என்னிடம் ப்ர்ண்டப் போல நடந்துக்குவார் என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

குடும்ப உறவுகளைவிட மேன்மையானதாக நட்பு திகழ்கிறது.

ஒரு பிறக்காத குழந்தையின் முனுமுனுப்பைக்கூட எழுத்தாளனால் எழுத முடியும்.

பிடித்தவர்களுக்கு புத்தகங்களைப் பரிசளியுங்கள், வருகிற ஏப்ரல் 23 உலக புத்தக தினம் அன்று உங்கள் குடும்பத்தோடு புத்தகக் கடைக்குச் சென்று ஏதேனும் புத்தகங்களை வாங்கி வாருங்கள்...

மனதுதான் வேண்டும் நண்பர்களே.....

நிலாவில் கால் வைப்பதல்ல அதிசயம், உங்களைப் பிடிக்காத மனிதர் ஒருவரை உங்களை நேசிக்கச் செய்வதுதான் அதிசயம்..

சாதாரணமாக ஏமாற்றுபவன்கூட மனசாட்சிக்குப் பயப்படுவான் . எதிராளியின் மனசாட்சியைத் தொட்டுவிட்டால் போதும், உண்மை ஜெயிக்கும்...
இலக்கியம் வாழ்நாளெல்லாம் மனசாட்சியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.

விட்டுக்கொடுத்தால் மனிதன் என்ன ஆவான் என்பதைப் பேசுவது ராமாயணம்.
விட்டுக்கொடுக்காவிட்டால் மனிதன் என்ன ஆவான் என்பதைப் பேசுவது மகாபாரதம்.

திராவிட இயக்கப் பின்புலம் கொண்டது என் வீடு , கடவுள் இருக்கா? இல்லையா? என்பதல்ல வேணுமா? வேணாமா? என்பதுதான் முக்கியம்...

இளைஞர்கள் இருப்பதனால், இணையம் இருப்பதனால் சொல்றேன்..இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழிந் ஒட்டுமொத்த படைப்புகளும் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்....

சிங்கபூர் அரசு பிறந்த குழந்தைக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு புத்தகஙளைப் பரிசாக வழங்குகிறது.
இளைஞர்கள் தமக்குப் பிடித்த கவிதை, கட்டுரை கதைகளை ஒலிப்பதிவு செய்து, காணொளி மூலமாகவோ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்...... தமக்குத் தெரிந்த மொழிகளில் மொழிமாற்றம் செய்ய முற்பட வேண்டும்...

எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நம் இலக்கியத்தை, மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள்.
தமிழைக் காப்பாற்றுவது என்பது எழுத்தாளனுடைய வேலை மட்டுமல்ல நம் எல்லாருடைய வேலை.....அதை நெஞ்சத்தில் கொண்டு செயலாற்றுவோம்...

இவ்வாறு எஸ்.ரா.பேசினார்.

சிறியவர்,பெரியவர் என 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, கேள்விகள் கேட்டு விடை தெளிந்து சிறிது வெளிச்சத்தோடு திரும்பிச் சென்றனர்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாராகப் பொறுப்பேற்றதற்குப் பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் புது பொலிவு பெற்று வருகிறது...

வாரமொரு ஆளுமைகள் இலக்கியம் பேச பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்கள் பயன்பெற வாரமொருமுறை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஒருவருடன் கலந்துரையாடல், தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டிந்னை ஒட்டி வாரம் மூன்றுபேர் மூன்று கதைகள் வாசகர்களுடன் கதைவிவாதம் என கதையாடலை மட்டும் வாசக சாலை நண்பர்கள் ஒருங்கிணைக்க நூலகம் கலை கட்டி வருகிறது...

அடுத்தவாரம் பாஸ்கர் சக்தி பேசப்போறார்.....வாங்க நண்பர்களே ஒரு பேச்சாளர், எழுத்தாளரின் பேச்சைக் கேட்பது என்பது ஆயிரம் புத்தகங்கள் வாசித்ததற்குச் சமம்.....

அன்புடன்
பாரதி கனகராஜ்

Comments