"உடைத்துப் பேசுவோம்

"உடைத்துப் பேசுவோம்" என்ற தலைப்பில் தோழர்.அருள்மொழி நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது "நூலகங்களுக்கு வரும்போதுதான் " நாம் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல " என்ற எண்ணம் புலப்படுகிறது.... அடுக்கடுக்காக இருக்கும் நூல்களைக் கண்டு நம் அறிவின் மீது நமக்கே அச்சம் ஏற்படுகிறது... நம்மைப் பார்த்து "ஒனக்கு ஒன்னும் தெரியாது" என்று பெற்றோருக்குப்பிறகு சொல்லக்கூடிய தகுதியை நூலகங்கள்தான் பெற்றிருக்கின்றன. நூல்கள் என்றவுடனேயே பாரதிதாசனின் "நூலைப்படி சங்கத்தமிழ் நூலைப்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் அப்படி" என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். உடைகளில் இருக்கின்ற அரசியலை கொஞ்சம் உடைத்துப் பேசுவோம். வெளிநாடுகளிலெல்லாம் ஒரு கொலை நடந்தால் அது திட்டமிடப்பட்ட கொலையா? கொலை செய்தவன் யார்? அவன் சைக்கோ கொலையாளியா? என்கிற கோணத்தில் விசாரணை நடக்கும் அதைப்பற்றி அலசுவார்கள். ஆனால், அதே ஓர் கொலை இந்தியாவில் ஹரியானாவிலோ, அம்பாசமுத்திரத்திலோ நுங்கம்பாக்கத்திலோ பட்டப்பகலில் ஒரு ரயில் நிலையத்திலோ நடந்தால், கொலை செய்யப்பட்டவள் பெண்ணாக இருந்தால், கொலை எத்தனை மணிக்கு நடந்தது? அந்த நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனியாத்தான் போனாளா? என்ன உடை உடுத்தி இருந்தால்? அவ ஒரு ஸ்லீவ்லஸ் போட்டுட்டு போயிருந்தா பின்ன அவள கொல்லாம விடலாமா? அப்பதான் அவகிட்ட ஒருத்தன் பேசிட்டிருந்துட்டு போனானான், பின்ன அவள கொல்லாம விடலாமா? நேத்து இன்னொருத்தனோட பேசிட்டு இருந்தாளாம்.. இப்படியாகத்தான் நாம் சிந்திக்கிறோம் மனதளவில் மனிதர்கள் நாம் கொலையாளிகளாக இருக்கின்றோம்.நம் மூளைகளில் அழுக்குகள் மண்டிக்கிடக்கின்றது அதை நாம் களைந்தாக வேண்டும்... கிராமங்களில் முதியவர்கள் மேலாடை அணியமாட்டார்கள், தொழில் செய்கிற ஆண்கள் மேல்சட்டை இன்றியே பணி செய்கிறார்கள்... நாற்று நடும் பெண்கள் சேலையை இடுப்பில் தூக்கிச் செருகிக் கொண்டுதான் பணி செய்கிறார்கள்.. உழைப்பு சார்ந்தோ இயல்பு சார்ந்தோ உடையில் ஆபாசமில்லை... 1.உடை அணிகிற பெண் உடை என்பது என் உரிமை என்கிறாள்... 2.நிறுவனங்கள், கலாச்சாரக் காவலர்கள் ,ஆண்கள் இதைத்தான் நீ அணிய வேண்டும் என்று திணிக்கிறார்கள்... டென்னிஸ் விளையாட்டில் ஆண்களின் உடை வீரர்களின் வசதிக்காகவும், பெண்களின் உடை பார்வையாளர்களின் வசதிக்கக்காகவும் தைக்கப்படுகிறது... இந்தியாவில் பெண்கள் அணிகிற, கலாச்சார உடை, மரியாதைக்குரிய உடை என்று சொல்லக்கூடிய புடவையில் பணம் வைத்துக்கொள்ள, கைக்குட்டை வைத்துக்கொள்ள, ஒரு பேனா வைத்துக்கொள்ள இடமுண்டா?... இருக்கின்ற இரண்டு கைகளில் எப்போதும் ஒரு கை புடவையை சரி செய்வதிலேயே கவனமாக இருக்கும்..(body conscious) திருமணத்திற்கான புடவையின் விலையில் பெண்ணின் மரியாதையை மதிப்பீடு செய்கின்ற நடைமுறை இங்குதான் உள்ளது. பெண்ணை ஒரு நுகர்வுப்பொருளாக( consumer commodity) ,கலாச்சாரத்தின் பெயரால் செயல்படவிடாத்தன்மையில் இந்த்ச் சமூகம் வைத்திருக்கிறது . பெண்ணை ஒரு உயிராக, அறிவாக, நம்மோடு பிறந்த மனிதப் பிறப்பாகப் பார்க்காமல் ஒரு உடலாகவே பார்க்கின்ற உலகளாவிய ஆணாதிக்க மனோநிலை உடையில் இருக்கிறது. பேருந்தில் எப்போதும் பெண்களுக்கு எட்டாத உயரத்திலேயே பிடி கம்பிகளும், படிக்கட்டுகளும் இருக்கின்றன.. இரயிலில் பெண்கள் கம்பார்ட்மெண்ட் எப்பவும் ஒரு கி.மீட்டருக்கு அந்தப்பக்கம்தான் இருக்கும்... சாதாரண பயணங்களுக்கே பெண்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இன்றைய காலத்தில் பெண்கள் தங்களது வசதிக்கேற்ப உடை அணிகிறார்கள்.... அவளுக்குப் பிடித்தமான,சல்வார் கமீஷ், ஒரு பேண்ட் டீ சர்ட் அணிந்து அவ செல்லும்போது அவளது உடல்மொழியே வித்தியாசப்படும்.. பெண்கள் உடை குறித்து வருந்துகிற சமூகம் கிராமங்களில் இன்னமும் ஒரு குலத்தார் தோளில் இருக்கும் துண்டு இடுப்பில்தான் இருக்க வேண்டும், என்று சொல்லுகிற சாதி அரசியலை கண்டுகொள்ளாதது ஏன்,,?.. தாழ்ந்த குலத்தில் ஒருவன் படித்து நகரம் சென்று நல்ல உடையணிந்து திரும்பி வந்தால் உனக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த உடை அணிய என்றுபேசும் உடை அரசியலை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை...? இப்படியான மனத்தடைகள் உடைய 1.முதலில் பெண்கள் முன்வரவேண்டும் 2.ஆண்கள் பெண்களை சக உயிராக மதிக்க வேண்டும் 3.பெண்களின் நடவடிக்கைகளை ஒழுக்க வரைமுறைகளோடு கட்டிப்போடுகிற மனத்தடையிலிருந்து விடுபட வேண்டும். ஆண் பெண் உறவு நட்புக்குரியது, ஆண் பெண் உறவு பழகுவதற்கு உரியது, ஆண் பெண் உறவு இணைந்து வாழ்வதற்கு உரியது என்பதை நாம் உணர வேண்டும். நாம் மற்றோர் வாழ்வுக்குத் தீர்ப்பெழுதும் பழக்கத்தைத் தொலைத்துவிடுவோம். மன வக்கிரங்களிலிருந்து நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய செல்போன்,லேப்டாப் கருவிகளை அப்படியே நம் அன்புக்குரியவர்களிடம் கொடுக்கிற நிலையில்தான் நாம் அவற்றை வைத்திருக்கிறோமா? நம்மை நாமே கேள்விகேட்டுக் கொள்ள வேண்டும்... நம்மைச் சுற்றியிருப்பவர்கள்தான் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என பெண்களைத் தவறாகப் பயன்படுத்திட குற்ற மனநிலையோடு உலவித்திரிகிறார்கள்.. ஒருவித போதை அவர்களை ஆட்டுவிக்கிறது... உடைதான் ஆண்-பெண் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. சமூக நாகரீகத்தைத் தீர்மானிக்கிறது... பெரியார் இன்னும் முன்னூறு ஆண்டுகளுக்கும் தேவைப்படுகிறார்... 1944 லேயே பெரியார்தான் பெண்ணுக்கு ஏன் விதவைத் திருமணம் தேவை என்பதை விவாதப் பொருளாக்கினார். ஒரு குறிப்பிட்ட ஆணோடு வாழப்பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம்...அது அவள் உரிமை என்று பேசினார்.. சும்மா இல்லை மாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றிப் பேசினார்... பெரியாரை நீங்கள் வாசிக்க வேண்டும் குறிப்பாக பெண்ணுரிமை குறித்துப் பெரியார் எழுதிய நூல்களை நீங்கள் தேடிப் படிக்கவேண்டும்" என்றார்.. இவ்வாறு தோழர் அருள்மொழி கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். வாசகர்களுடனான கலந்துரையாடலில்போது பெண்ணியம், விவாகரத்து, தாலி கட்டிக் கொள்ளாமல் வாழ்வதன் அவசியம், இறை சிந்தனையிலிருந்து விடுபடுவதே பெண்விடுதலை என்பன குறித்தும் பல வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்... தோழர் ஓவியா தன் வாழ்வை மாற்றிய நூலாக "ராகுல் சாங்கிருத்யானின் -வால்கா முதல் கங்கைவரை" என்ற நூலைச் சொல்கிறார். அதுபோல தோழர் அருள்மொழியின் வாழ்வை மாற்றிய ,பாதித்த ஒரு நூல் என்றால் அது எது? ஏன்? தோழர் ஓவியாவை மட்டுமல்ல வால்கா முதல் கங்கைவரை நூல் பலரையும் பாதித்திருக்கிறது. அதுபோல மார்க்ஸிம் கார்க்கியின் தாய், சிங்கிஸ் ஐத்மாத்தவினுடைய அன்னைவயல் போன்ற நூல்களைச் சொல்லலாம். என் வாழ்வில் பெரிதும் பாதித்த நூல் ரொம்ப சின்ன புத்தகம்தான் பெரியார் ஓர் மேடையில் பேசியதை அண்ணா குறிப்பெடுத்து வெளியிட்ட பேச்சு வடிவிலான நூல் அது ..... அந்த நூலின் பெயர் " இனி வரும் உலகம்" அதில் பெரியார் சொல்லுவார் இனி வரும் உலகத்தில் நாணயம் பணம் என்பது இருக்காது அறிஞர் வளர்ச்சி இருக்கும் ,ஆகாயவழிப்பயணம் இருக்கும், சட்டைப்பையில் கம்பியில்லா தொலைதொடர்பு சாதனம் இருக்கும், ஆண்களும் பெண்களும் இந்தப் புனிதமான திருமணம் என்ற சடங்கை ஒதுக்கி ஒத்த அன்பாலும் காதலாலும் சேர்ந்து வாழ்வார்கள்... தனிமனிதனுக்குத் துன்பம் வந்தால் அதை தனக்குவந்த துன்பமாக உலகம் கருதும்.... இப்படியாகத் தனது உரையை நிறைவு செய்தார் .. நூலக அலுவலர்களும் பணியாளர்களும் மிகச் சிறப்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்... மணிகண்டன் மற்றும் சக நூலகர்கள் மிக நேர்த்தியாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்... நண்பர்கள் இளங்கோ,சரவணனோடு தோழர் அருள்மொழி, நூலகர் காமாட்சி அவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்ப்டம் எடுத்துக் கொண்டோம்... முன்னதாக தோழர் அருள்மொழியிடம் என் டைரியில் வாழ்த்தொப்பம் பெற்றபோது "மனிதநேயம் காப்போம்" என்று பதிவிட்டு தன் கையொப்பமிட்டிருந்தார்... உடைத்துப் பேசுவோம். மனித நேயம் காப்போம் நூல்பல கற்போம்... பெண்மையைப் போற்றுவோம்... மானுடம் வெல்லும்..

Comments