திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் ஓர்நாள்
ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதே கல்லூரிக்கு நண்பன் குமார் அழைப்பின் பேரில் நானும், தனவேலும் எமது வளனார் கல்லூரி நண்பர்களோடு சென்றிருந்தோம். நேற்று நெடுநாளுக்கு பிறகு அந்த கல்லூரிச் சாலைக்குள் நுழைந்ததும் , ஒரு புது வித வாசம் என்னுள் படர்ந்தது. நண்பரும் பேராசிரியருமான சங்கீத் வளாகத்தின் உள்ளிருந்து ஒரு பேராசிருயக்கே உரிய தோரணையோடு என்னை வரவேற்றார். தேநீர் பருகி, உணவருந்தி விட்டு மிகச் சரியாய் மதியம் 2.15க்கு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு தொடங்கியது.
அஞ்சலி எனும் மாணவி மிக அழகாய் ஆங்கிலத்தில் பொன்மொழிகள் எல்லாம் சொல்லி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிஷாந்த் வெல்கம் அட்ரஸ் கொடுத்தார். அதன்பின் எதிர்பாரா ஆச்சர்யமாக சிறப்பு விருந்தினருக்கான அறிமுகம் பற்றிய காணொளி ஒன்றை ஓடவிட்டனர். அது என்னைப் பற்றிய செய்திகள் தான் என்றாலும் மாணவர்களும், நண்பர் சங்கீத்தும் ,முதல் கணமே என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள். பின்னர் கல்லூரியின் அப்துல் கலாம் அரங்கில் வாசிப்பு குறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நமது இளங்கோ மன்றத்தில் நாம் வட்ட வட்டமாக அமர்ந்து பேசும் முறையைப்போலவே அங்கும் சங்கீத் ஒரு வட்ட மேசை மாநாட்டிற்கு மாணவர்களைத் தயார்படுத்தினார்.
ஆங்கிலத்துறை மாணவர்கள் மட்டுமல்லாமல் நுண்ணுயிரியல், கணிதம் என பல்வேறு துறைகளில் வாசிப்பு ஆர்வம் மிக்க தேர்ந்தெடுத்த மாணவர்கள் 40 பேர் அந்த அரங்கில் கூடினர். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே ஆளுக்கொரு நூலைப் படித்து வைத்திருந்தனர். நான் முதலில் அறிமுக உரை நிகழ்த்தினேன். பின்னர் அவர்கள் தங்களின் நாவல்களின் கதைகளை சொல்லச் சொல்ல இடையிடையே நான் சில அனுபவ வரிகளை கோடிட்டுக் காட்டினேன். 16 மாணவர்கள் 20 க்கும் மேற்பட்ட நாவல்களைப் பற்றி பேசி முடித்த கணம் நிறைவுரையாக நான் மீண்டும் பேசிட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
முதலில் நான்தான் மாணவர்களோடு சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் சென்றிருந்தேன். ஆனால், ஜான், திவ்யா, நஃபியா, கலைவேந்தன், விஷ்ணு, பீட்டர், பவித்ரா, நிஷா, நிஷாந்தன், அஞ்சலி, கணேஷ் என மாணவர்கள் அதியற்புதமான அனுபவத்தை அவர்கள் எனக்குப் பரிசளித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வாசிப்பு தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தனர் நானும் தெளிவுபடுத்தினேன்.
பெரும்பாலும் எல்லோரும் கல்லூரி இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள், அவர்களின் திறமைகள் கண்டு எனக்கு உள்ளபடியே மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இன்னும் பயணப்பட வேண்டிய பாதைகளுக்கான வாசல்களை அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். கல்லூரிக் காலம் முடிந்த பிறகு நாம் ஏதேனும் கல்லூரிகளுக்குப் பயணப்படும்போது எப்போதும் நம்முள் ஒரு இனம் புரியாத சோகம் ஆட்கொண்டு விடுகிறது. அதை யாரிடமும் சொல்லிட முடியாமல் நாம் பரிதவித்துப் போகிறோம்.அந்த இருபாலர் கல்லூரியில் நட்பின் சிறகை விரித்தபடி மாணவ நண்பர்கள் முழுவதும் எழுதிமுடித்த லாங்சைஸ் நோட்டுக்களில் படித்தபடி சுற்றித்திரிந்ததைப் பார்க்கையில் மனசு ஏதோவித பொறாமைகளுக்குள் சென்று மீண்டது. மாணவர்களோடு அத்தனை தோழமையோடு பழகும் பேராசிரியர்கள், பேரழகான நூலகம், ஏதோவொன்றை கற்றுக் கொள்ள ஆர்வத்தோடு பேராசிரியர்களை வட்டமிடும் மாணவர்கள் என பார்க்கவே அந்த தூய நெஞ்சக் கல்லூரி வளாகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
கூட்டம் முடிந்ததும் நஃபியா என்ற மாணவிக்கு ,அவர் சிறப்பாக கதை சொன்னதற்காக அவர்கள் கல்லூரி எனக்குப் பரிசளித்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் பதின் நாவலை அவருக்கு பரிசளித்தேன். திமிரோடு கதை சொன்ன தியாவுக்கு ஜெயமோகனின் " சோற்றுக் கணக்கு " சிறுகதையை பரிசளித்து வந்தேன். தம்பி கலைவேந்தன் ரொம்பவே உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தான். அழகாக காணொளி வடிவமைத்த கலைக்கும் சங்கீத் பரிசளித்த பாலகுமாரன் நாவலை பரிசளித்தோம்.
3 மணி நேரமாக நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் விடைபெற்றுப்போக விஷ்ணு, பீட்டர், கலை, ஜான், மட்டும் நின்றிருந்தனர். பின்னர் அவர்களோடு வெளியே வந்து
ஒரு தேநீரகத்தில் தேநீர் அருந்தினோம். அப்போதும் நிறைய கதைத்தோம். நண்பன் சங்கீத் என்னையும் நவீனையும் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்று தன் இணையரோடு சேர்ந்து சுவையான உணவு பரிமாறினார். அவர் வீடு முழுக்க வைத்திருந்த ஓரான் பாமுக் புத்தகங்களைப் பார்த்து சங்கீத்தின் வாசிப்பைக் கண்டு ஆச்சர்யம் கொண்டேன். திருப்பத்தூரிலிருந்து வேலூருக்கு என்னையும் நவீனையும் வண்டி ஏற்றிவிட்டு விட்டு நண்பன் சென்றான்.
பேருந்தில் ஏறி அமர்ந்து செல்போன் எடுத்து வாட்சப் பார்த்தால் தம்பிகள், கலை, ஜான், பீட்டர், விஷ்ணு, என எல்லோரும் ஒரே அன்பின் விசாரிப்புகள் . இதில் கலை ஒரு படி மேலேபோய் ஒரு வாட்சப் குழுவே தொடங்கி விட்டான்.
பீட்டர் எனக்கு இப்படியாய் செய்தி அனுப்பி இருந்தான். "My frd *john* too called me and was in ecstatic feeling..and narrated to me like this day as a most memorable day of college life..." எனக்கு உள்ளூர மகிழ்ச்சியின் வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்த நாளை அழகாக்கிய நண்பன் சங்கீத்துக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். நீ ஒரு நல்ஆளுமை நண்பா. உன் போலான பேராசிரியர்கள் பல பேர் கிடைத்திட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
தம்பி நவின் வேலூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத் தேநீர் வாங்கித்தந்து வாலாஜா நோக்கிப் புறப்பட்டான். நானோ சென்னை நோக்கிய பேருந்தில் ஏறி ஏக்நாத்தின் " "ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். " வாழ்க்கையில் படிக்கவும் வாழ்க்கையைப் படிக்கவும் ஊரில் இருக்கிறது ஏராள விஷயங்கள். அந்நிய தேசம் அல்லது நகரம் பிழைப்புக்குப் படியளந்து கொண்டிருந்தாலும் பிறந்த ஊர்தான் உயிருக்குள் கடைசி வரை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் உயிர். அந்த ஊரின் மடியில் நாம் சப்பரமாகவும் இருந்திருக்கலாம். சம்மணம் போட்டும் அமர்ந்திருக்கலாம் " என்கிறார் ஏக்நாத் . ஊர் மட்டுமா ஞாபகத்தில் உறைந்திருக்கிறது? கல்லூரியும்தானே.
- பாரதி கனகராஜ்
21.02.2020
Comments
Post a Comment