ஜீவமுகம்

காலத்தின் கரம் பிடித்து நீள நடக்கும் நம் பயணஙகளில் சில நல்ல மனிதர்களை அறிமுகம் செய்வித்து வாழ்க்கை "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார்" என்று பெருமை பேசிச் செல்லும். தமிழ்நாட்டின் இதயநகரமாய்த் திகழும் மணப்பாறையில் எனக்கு அப்படிக் காலம் அறிமுகம் செய்வித்த நல்ல நண்பர்தான் கவிஞர் ஜீவிதன் அவர்கள்.

ஒரு பத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள லெட்சுமி ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் எழுத்தாளர் ஜெயந்தனின் சிந்தனைக்கூடல் மாதாந்திர இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில்தான் அவரை முதன்முதலாக பார்த்தேன். தனது நண்பர் ரகுபாலாஜியோடு சேர்ந்துவந்து அந்த கூட்டத்தில் அவர் பங்குபெற்றிருந்தார். மிகவும் இளமைத்துடிப்பான, துள்ளலான, பொன்னெழில் மின்னும் முகம் கொண்டவராக அன்று அவர் எனக்குக் காட்சி தந்தார். 

அன்றைய சந்திப்பில் அவரும் நானும் உரையாடிக் கொள்ளவில்லை. ஆனால் அப்போதே அவர் " நெஞ்சம் மறப்பதில்லை " என்ற காதல் கவிதைத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டு மணப்பாறையில் நன்கு அறியப்பட்டிருந்தார். அவரின் பரந்துபட்ட வாசிப்பின் தேடல்குறித்தோ, தன் கதை சொல்லும் பாணியிலேயே காண்போரை மகிழ்ச்சியின் எல்லைக்கு அழைத்துச் சென்று பரவசத்தில் ஆழ்த்தும் அவரின் பேராற்றல் குறித்தோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

2017இன் பிப்ரவரி மாதம் தம்பி ஆலன் இதயனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக நூலக முற்றத்தில் நான் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். மணப்பாறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஒருநாள் பேச வரவேண்டுமாய் அழைத்திருந்தனர். தோழர் சக்தி செல்வனும் அழைத்துப்பேசி "அமைதி" என்ற ஒரு தலைப்பில் பேசச் சொன்னார். 

2017 மார்ச் 3 என்று நினைக்கிறேன். அந்த நாள் மிக அழகான நாள். அன்று மீண்டும் கவிஞர் ஜீவிதன் அவர்களை  நான் சந்திக்கப் போகிறேன் என்று எனக்கு முன்பே தெரிந்திருக்கவில்லை.
மணப்பாறை காமராஜர் சிலையிலிருந்து புத்தக விழிப்புணர்வு பேரணியாக புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்த நொச்சிமேடு பைபாஸ் வரைக்குமாய் வாகனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நானும் அந்த பிரச்சார வாகனத்தில் ஏறிக்கொண்டு மைக்கைப் பிடித்தபடி கார்ல் மார்க்ஸ் , அம்பேத்கர் ஆகியோரின் வாசிப்பின் ஆர்வம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வந்தேன். புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அந்த இடத்தில் இன்றைக்கு குறிஞ்சி உணவகம் கட்டப்பட்டிருக்கிறது.
அன்றைக்கு தோழர் சக்திசெல்வனின் தாயார் உட்பட சிலர் புத்தகக் கண்காட்சியினை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தனர். கிட்டத்தட்ட 20 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெட்டவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கார்த்திகேயா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் முடிந்ததும் என்னையும் கவிஞர் அறிவுச்செல்வனையும் பேச அழைத்தார்கள். 

கவிஞர் அறிவுச் செல்வன் அமைதி என்ற தலைப்பில் பேசிமுடிக்க ,என்னுடைய நேரம் வந்தபோது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினேன். அண்ணல் காந்தியடிகளின் விடுதலைப்போராட்ட வாழ்க்கைப்பயணம், எழுத்தாளர் இலட்சுமணப்பெருமாளின் கதை , கவிஞர் தமிழ்மணவாளனின் "பரமேஸ்வரியின் வாழ்க்கைக் குறிப்புகள்" கவிதை, சிலப்பதிகாரம், தந்தை பெரியார், என சில செய்திகளை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். அதிகபட்சமாக அரங்கத்தில் 80, நூறுபேர் அமர்ந்து கேட்டனர். பேசிமுடித்து மேடைவிட்டு கீழே இறங்கியதும் சில நண்பர்கள் கைகொடுத்து வாழ்த்துக் கூறினர். கொஞ்சம் நன்றாகவே பேசியதாய் உணர்ந்தேன். அன்றுதான் தோழர் முத்து இருளப்பகுமார், அசுரன் சங்கர், முன்னா அசார், நண்பன் நிவேதிதன், தம்பி ஆலன் இதயனின் நண்பர்கள் என பலரை சந்தித்தேன். அப்போது அந்தக் கூட்டத்துக்குள் இருந்து பூப்போட்ட வெள்ளைச் சட்டையணிந்த நிலவொளி பளிச்சென்று வீசிய ஒரு முகம் உங்ககிட்ட இருந்து சிறுகதைகள எதிர்பார்க்கிறோம் என்று சொன்னது. இன்றுவரை நான் ஒரு சிறுகதையும் எழுதவில்லை அதுவேற விசயம்.  ஆனால் பின்னாளில் என்னிடம் அன்று சொன்னவரே இரண்டு நாவல்கள் முடித்து பல்வேறு சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார். அன்று நான் சந்தித்த பொன்னெழில் மின்னும் அந்த ஜீவ முகத்தோடு ஒரு நெடும்பயணம் போகப் போகிறோம் என்று அப்போதும் எனக்குத் தெரியாது.

அப்பாவும் அதே ஆண்டு ஜூன் மாதக் கடைசியில் விபத்தில் இறந்துபோக , சென்னையிலிருந்து ரயில்பிடித்து கார்பிடித்து வேகவேகமாக இரவு 8 மணிக்கு ஊர்ச் சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்து கொள்ளிவைக்கப்போகும் சில நிமிடத்திற்குமுன்தான் பார்த்தேன் தம்பி ஆலனுக்கு அருகில் அந்த ஜீவ முகம் நின்றுகொண்டு எல்லோரையும்போல அந்த வனாந்திரக் காட்டின் இருட்டுக்குள் இழப்பின் துயரத்தை விசாரித்துக் கொண்டிருந்தது.

அதே ஆண்டு செப்டம்பர் 23 இல் சீனிவாசன், அசுரன் சங்கர் , என் தெருக் குழந்தைகள் என பலரோடு சொக்கலிங்கபுரத்தில் என் வீட்டு வாசலில் நடைபெற்ற இளங்கோ மன்றக் கூட்டத்தில் அமைதியாக வந்தமர்ந்து கூட்டம் முடியும்வரை இருந்து பின் கருத்துகள் பல பகன்று விடைபெற்றது மீண்டும் அந்த ஜீவமுகம்.

இப்படியாய் கடந்த மூன்று ஆண்டுகளில் குறுக்கும் நெடுக்குமாக இலக்கியம் ,தமிழ், கலை, சினிமா, கதைகள் ,எழுத்து ,வரலாறு ,இளங்கோ மன்றம், சிலப்பதிகாரக் கதையாடல்,  என்று பல்வேறு தளங்களில் அந்த ஜீவ முகத்தை அதன் தரிசனத்தை கண்டும் கேட்டும் வருகிறேன்.

"ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்களேன்" என கவிஞர் ஜீவி சொல்ல தோழர். முத்து இருளப்ப குமார்,  அசுரன் சங்கர், அசார், இளமாறன் நான் என மணப்பாறை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்தபடி மணப்பாறை முறுக்குச் சுவைத்தபடி பேசத் தொடங்கினோம். அவ்வப்போது வெறும் பார்வைமட்டும் வீசி  கொஞ்சம்பேசி கடந்தபோன அந்த ஜீவ முகம் அன்றுதான் ஜெயமோகனின் "யானை டாக்டர் " உட்பட பல்வேறு கதைகளை தனக்கே உரிய செம்மாந்த கதை சொல்லும் பாணியில் கதைத்து பார்வையாளர்களாகிய எங்களை மிரட்டிக் கொண்டிருந்தது. அன்று தொடங்கி ஜெயந்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், சுஜாதா, சரவணன் சந்திரன், சல்மா, ஜி.ஆர்.சுரேந்தர் நாத் , லஷ்மி சரவனக்குமார் , கார்த்திக் புகழேந்தி, ஜி.நாகராஜன், நா.முத்துக்குமார். என இருபதுக்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்களுக்கு மாதாந்திர படைப்புலகக் கொண்டாட்டக் கூட்டங்களை எமது இளங்கோ மன்றத்தின் சார்பில் நடத்தி இருக்கிறோம்.அப்படி ஒரு வடிவத்தை முதன்முதலில் முன்வைத்து, இறுதிமட்டும் எல்லாப் படைப்பாளிகளையும் முற்று முழுதாய் வாசித்துவிட்டு வந்து களத்து நின்று ச்சும்மா நின்று விளையாடும் பேராளுமை கவிஞர் ஜீவிதன்.

2018 அக்டோபர் 28 அன்று சோழர்களின் கட்டிடக் கலையின் உச்சமாய்த் திகழும் கொடும்பாளூர் மூவர் கோவிலில் கவிஞர் ஜீவிதனின் " பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினச் சொற்பொழிவு " நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தத்ரூபமா அப்படியே கொடும்பாளூருக்கு வந்திருந்த 20 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்குக் கடத்திக் கொண்டிருந்தார் அவர். ஜீவியின் எத்தனையோ கதைச் சொற்பொழிவுக் காலக்கோட்டில் அந்தநாள் ஒரு முக்கியமான நாள். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அன்றுதான் எமது " சிலம்பு மாத இதழினையும் " இளங்கோ மன்றத்திற்கான சின்னத்தினையும் முதன் முதலாய் வெளியிட்டோம். அந்தக் கூட்டத்தில்தான் ஜீவியின் சகோதரர் நிலாமகன் என்ற பெயரில் எழுதிவரும் ஜி.வி. சந்திரசேகரன் அண்ணாவையும், தம்பி சாணக்கியாவையும் முதன் முதலாய் சந்தித்தேன்.

இதுவரை எமது இளங்கோ மன்றம் 81 நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறது. பல்வேறு இலக்கியக் கூடுகைகளில் கவிஞர் ஜீவிதனின் சொற்பொழிவை அந்த வெட்டவெளிப் பொட்டலில்  பலரைப்போலவே நானும் கேட்டு ரசித்திருக்கிறேன்..அவரின் பேச்சு , எழுத்தாளர்களின் கதாபாத்திர விவரணை எல்லாவற்றையும் கடந்து அந்தக் கதைகளுக்கு ஏற்றார்போல தன் உடல்மொழிகளாலேயே கதை சொல்லும் தனித்திறமை மிக்கவராக அவர் திகழ்கிறார். அவர் கதை சொல்வதை இதுவரை கேட்டு ரசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என் வீட்டு வாசலில் நடைபெற்ற நாஞ்சில் நாடன் கூட்டத்தில் கயித்துக் கட்டிலில் அமர்ந்தபடி அவர் பேசியதாகட்டும்,  மொட்டைமாடியில் நடந்த ஜெயகாந்தன் படைப்புலகத்தில் " சில நேரங்களில் சில மனிதர்கள் " நாவல் குறித்து அவர் பேசியதாகட்டும், பழனி கவுண்டன்பட்டியில் கவிஞர் தோகையாரின் தோட்டத்தில் ஆட்டுப்பட்டியில் அமர்ந்துகொண்டு இயக்குனர் பாண்டிராஜின் " ப்ளாஷ் பேக் " நூல் பற்றி பேசியதாகட்டும், தொப்பம்பட்டியில் நண்பர்கள் குழு அறக்கட்டளை  சமீபத்தில் ஜனவரி 12 இளைஞர் நாளன்று ஒருங்கிணைத்த கூட்டத்தில் அந்த மாரியம்மன் கோவில் வாசலில் பேசியதாகட்டும், அதே ஊர் பள்ளிக் கூடத்தில்  முன்பொருமுறை பிரபஞ்சனின் " "மரி என்கிற ஆட்டுக்குட்டி" கதை சொன்னதாகட்டும்,  கருப்பசாமியின் ட்ரினிடி டியூசன் செண்டரில் 100 மாணவர்களிடையே உலக அறிவு குறித்துப் பேசியது, உலக இலக்கியப் பேரவை தொடக்க விழாவில் எர்னஸ்டு ஹெமிங்க்வேயின் உலகப் புகழ்பெற்ற " கடலும் கிழவனும்" நாவல் கதை சொன்னது, அதே பேரவையில் மற்றொரு நாள் குழந்தைகளுக்கு கதை சொன்னது, டால்ஸ்டாய் கதை சொன்னது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற  ஜெயந்தனின் கதையாடல் நிகழ்ச்சியில் அவரின் " பஸ் " கதை சொல்லி எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பேரன்பைப் பெற்றதாகட்டும், கார்த்திக் புகழேந்தி படைப்புலகத்தில் " அவளும் நானும் " நூல் குறித்துப் பேசியது, கருங்கும்மிருட்டில் வெள்ளையகவுண்டன்பட்டியில் ஜெயந்தன் கதை,  காவல்காரன்பட்டியில் மாணிக்கத்தின்  மாரியம்மன் டியூசன் செண்டர் மாணவர்களிடம் பேசியது, வையம்பட்டியில் சிலப்பதிகாரக் கதையாடல், கடைசியாக சிலம்பு நூலகத்தில் நடந்த ஜி.நாகராஜன் படைப்புலகத்தில் குறத்தி முடுக்கு நாவல் குறித்துப் பேசியது, மணப்பாறை கிளை நூலகத்தில் நடைபெற்ற " சுஜாதா படைப்புலக் கூட்டத்தில் " கதையில் யாரோ ஒரு பெண்  யாரோ ஒரு ஒருவனின் சட்டைப் பித்தானை பிய்த்து எறிந்ததாய்ச் சொல்லி அனைவரையும் சிரிக்கவைத்ததாகட்டும், சர்வைட் மகளிர் கல்லூரி மாணவர்களிடையே கருங்குளம் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பேசியதாகட்டும், என எத்தனை எத்தனை கூட்டங்கள் , எத்தனை ஆச்சர்யமான பேச்சுக்கள்..எத்தனை அன்பின் தருணங்கள். அத்தனையும் கடந்தபின்பும் தீர்ந்துபோகாதவராக, தன் அறிவுலகை, மெய்ஞானத்தை தொடர்ந்து ஆச்சர்யத்தாலேயே எனக்குப்போலவே எல்லோருக்கும் பந்திவைப்பவராகவே கவிஞர் ஜீவிதன் இருந்து வருகிறார். 

தம்பிகள் ஆலன், சிவா,  தோழர் சங்கரோடு ஒருங்கிணைத்த " வேள்பாரி கொண்டாட்டம் " நிகழ்ச்சியில் 
கவிஞர் ஜீவிதன்  "வேள்பாரி நாவலில் போர் முறைகள் " குறித்துப் பேசினார். அவருடைய அன்றைய போர்க்களக் காட்சிகள் விவரணையைக் கேட்டு உள்ளபடியே  நானும் நண்பன் காமராஜூம் ரொம்பவே மிரண்டு போனோம். ஒரு மனுசனால ஒரு புத்தகத்தை இந்த அளவுக்கு உள்வாங்கி வெளிப்படுத்த முடியுமா என ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப்போனோம்.

மணப்பாறை நிலத்திற்கென்று  கதை சொல்லும் மரபு என்று ஒன்று இருக்கிறதென்றால் அது தற்போது நண்பர் ஜீவிதனுக்குள்தான் முழுமையாக நிலை கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரீட்சயப்பட்ட பெயராக தன் எழுத்தால், பேச்சால் , சினிமாத் துறையிலும் கால் பதித்து வளர்ந்திருப்பார் நண்பர் ஜீவி..புராண இதிகாசங்கள் படிப்பதில் அவ்வளவாக எனக்கு நாட்டமில்லைதான். ஆனபோதும், அந்தப் புராணஙகளில் காட்டப்படும் இலட்சியக் கதைமாந்தர்கள் பற்றி யாரேனும் கூறினால் அது ராமனோ, கர்ணனோ அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றால் நண்பர் ஜீவியைப்போல் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

ஈ, எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காதவர் என்று சில மனிதர்கள் பற்றி பிறர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா. நான் ஜீவியின் கிட்டே நின்று அச்சு அசலாய் அப்படியே அந்தப் பண்பைப் பார்த்திருக்கிறேன். அவரை நம்பி ஒரு செயலில் துணிச்சலோடு இறங்கலாம் , அவருக்கு நாம் செய்யும் செயலின்மீது பிடிப்பு இல்லாவிட்டாலும்கூட சொன்ன சொல்லுக்காக பின்வாங்காது பிறரைவிடவும் முன் நிற்பார்.
என் அலைபேசியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு எண்ணுக்கு அதிகமாய் அழைப்பு போயிருக்கிறது என்றால் அது கடைசியாய் 400 என்று முடியும் நண்பர் ஜீவியின் எண்ணுக்குத்தான். அதேபோலவே ஒரு எண்ணிலிருந்து அதிக அழைப்புக்கள் வந்திருக்கிறது என்றால் அதுவும் அவரிடமிருந்தே. என் அம்மாவிடம் பேசியதைவிடவும் அதிகமாய் அவரோடு உரையாடி இருக்கிறேன். வயது வித்தியாசங்களைக் கடந்து , உயர்வு தாழ்வு கருதாது, மிக இயல்பாக கள்ளம் கபடமின்றிப் பழகும் எளிய உள்ளத்துக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஜீவிதன். 

எல்லா நேரங்களிலும் எனக்கு உணவு வாங்கித் தருபவராக , தன் சொல்லாலே  அவருக்கே தெரியாமல் என் காயங்களுக்கு மருந்திடுபவராக அவர் இருந்திருக்கிறார். ஒருநாள் மணப்பாறை  உதயம் தியேட்டருக்கு அருகில் ஒரு சிறிய ரோட்டோரத்துக் கடையில் எனக்கு உணவு வாங்கித் தந்தார் எதோ பேசிக் கொண்டிருந்தோம் எனக்கே தெரியாமல் அழுதுவிட்டேன்...தோகையார், நண்பன் காமராஜ், சங்கர், நான் என பலரின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிற நல்ல நண்பராக அவர் எப்போதும் இருந்திருக்கிறார். கவிஞர் ஜீவிதன் எனக்கு யாரென்றால் என் நம்பிக்கை. அவரைப் பல்வேறு சூழல்களில் சங்கடப் படுத்தி இருக்கிறேன் அதற்கெல்லாம் எப்போது எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை. 

2019 பிப்ரவரி 14 அன்று விடத்திலாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் ஜீவி சார் வெளியிட அவரின் மனைவி சரண்யா அக்கா பெற்றுக் கொள்ள , நான் எழுதி நண்பன் இளா வடிவமைத்த " அம்மு பேச மாட்டியா" என்ற கவிதை நூலினை வெளியிட்டு அன்று ஜி.ஆர். சுரேந்தர் நாத் படைப்புலகம் கூட்டமும் நடத்தி மன்றத்து நண்பர்கள் காதலைக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அதே பிப்ரவரி 14 அன்று ஜீவி சாரின் குழந்தைகள் கைகளாலேயே சிலம்பு நூலகம் தொடங்கினோம். அந்த நாள் காதலர் தினம் மட்டுமல்ல கவிஞர் ஜிவிதனின் திருமண நாளும்கூட. 

சென்ற ஆண்டு மே 5 ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். நண்பன் சாலமன் புலியூர் முருகேசனின் "படுகைத் தழல்" நாவல் குறித்துப் பேசினான். தம்பி ஆரோக்கிய ஜெகன் கவிஞர் ராஜாத்தி சல்மாவின்  " இரண்டாம் ஜாமங்களின் கதை " நாவல் பத்திப் பேசினான்.
இதெல்லாம் ஏன் சொல்றேன்னுகேட்குறீங்களா சம்பந்தமிருக்கிறது நண்பர்களே. இன்று மே 5 கவிஞர் ஜீவிதன் அவர்களின் பிறந்த நாள். அனேகமாக 39 ஆம் அகவையில் அடி எடுத்து வைக்கிறார் என்று நினைக்கிறேன். எழுத்தை நேசிக்கும் ஒரு கவிஞனுக்கு எழுத்தாலே வாழ்த்து சொல்வதுதானே சிறப்பாகும்.

இந்த ஆண்டு 2020 புலர்ந்த பொழுதில் கவிஞர் ஜீவிதன் அவர்களுக்கு " பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி விருதும் " கவிஞர் தோகை.பழனிவேல் அவர்களுக்கு " பாவேந்தர் பாரதிதாசன் விருதும் " வழங்கி எமது இளங்கோ மன்றம் சிறப்பு செய்தது. அன்று அந்த புத்தாண்டை வரவேற்ற தேவ நிமிடங்களில் கவிஞர் ஜீவிதனும், தோகையாரும் மிக அழகானதொரு ஏற்புரையை வழங்கினார்கள். தோகையார் "தலைக்கணம் இல்லாமல் வாழ விழைகிறேன்" என்றார். "எல்லோருக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன. அதை வெளிப்படுத்துவதற்கான களங்கள்தான் வாய்ப்பதில்லை, புத்தக வாசிப்பு என்பது ஒரு புத்தனின் தவத்தைப்போல புத்தகத்திற்குள்ளேயே புத்தம் ஒளிந்திருக்கிறது " என்றார். என் இனிய நண்பர் ஜீவியின் எத்தனையோ பேச்சுக்களை ரசித்திருந்தாலும் அன்றைக்கு பாரதி விருது பெற்றபின் அவர் பேசிய விருது ஏற்புரைக்கு என்று என்னுள் ஓர் நீங்காத இடமுண்டு...

அவரை சுப்ரமணிய பாரதியாய் பல தருணங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். அவருடன் பலகியவர்கள் நிச்சயமாய் இதை ஆமோதிப்பார்கள். " காக்கைக் குருவி எங்கள் ஜாதி"  என்று உயிர் மானுட நேயம் பேசிய பாரதியும் ஜீவிதனும் ஒரே ஜாதி. எமக்குத் தொழில் கவிதை என்று அவன் வாழ்ந்ததைப் போலவே நண்பர் ஜீவியும் எழுத்தோடும் தமிழோடும் கல்வியோடுமே தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். பாரதியாரும் செல்லம்மாளும் தம் மக்கள் செல்வங்கள் தங்கம்மாளோடு எப்படி அன்பொழுக வாழ்ந்தார்கள் என்பதை நண்பர் ஜீவியும்- சரண்யா அக்காவும், தமது இரட்டைக் குழந்தைகளான  சஞ்ஜீவிதா, சஞ்ஜீவிதன் ஆகிய தன் மக்கள் செல்வங்களோடு விடத்திலாம்பட்டியில் வாழும் அன்பு நிறைந்த வாழ்வைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 

அந்த பாரதி அன்று கண்ணனைக் கண்ணம்மாவாக்கி பாடல் பாடினார். இந்த பாரதியோ கண்ணம்மாவின் வயிற்றிலேயே மகனாய்ப் பிறந்தார். ஆம் நண்பர் ஜீவியின் அம்மாவின் பெயர் கண்ணம்மா...நேற்று நிலாமகன் அண்ணனோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது கண்ணம்மா அம்மாவின் குரலைக் கேட்டேன் " நாளைக்கு தன் சின்ன மவனுக்குப் பொறந்த நாள் என்று ஆனந்தமாய் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. நீங்கள் எப்படி இப்படி பொறுப்போடும் , அறிவோடும் இருக்கிறீர்கள் என்பதை கண்ணம்மா அம்மாவைப் பார்த்தே தெரிந்து கொள்கிறேன் நண்பா....
மணப்பாறையைச் சுற்றியுள்ள எல்லாத் திசைகளிலும் கடந்த  இரண்டு ஆண்டுகளில் உங்களின் வாகனத்தில் உங்களோடு நான் பயணித்திருக்கிறேன். எத்தனையோ கதைகளை நிரம்பப் பேசியிருக்கிறோம். நிலையற்ற இந்த வாழ்வில் எல்லோரும் பணம் , பொருள் , நகை என்று ஓடிக்கொண்டிருக்கும்போது நீங்களும் நானும் நம் நண்பர்கள் கண்ணதாசன், இளமாறன், தமிழ்மணி அண்ணா, தோகையார் என எழுத்தையும், தமிழையும் ,கலையையும் , கதைகளையுமே பேசித் திரிந்திருக்கிறோம். 

இந்த மிகச் சிறிய வாழ்வின் நீண்டபயணத்தில் உங்களைச் சந்தித்தது, ஆவின் தேனீரகத்தில் தேனீர் பருகியது, சென்னை புத்தக கண்காட்சிக்காய் விடிய விடிய பேசிக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தது, நம் நண்பர்களைக் கொண்டாடி மகிழ்ந்தது, பல நண்பர்களிடம் என்னை விட்டுக்கொடுக்காது நீங்கள் பேசியது, கஜா புயல் நிவாரணத்திறகாய் ஓடித்திரிந்த நாளில் தன் துயரம் நீங்கி உடன் நின்றது , சின்னப்பயலா இருந்த என்னையும் ஓராளாய் மதித்து எந்தவொரு கணத்திலும் சொல்லாலும் ,செயலாலும் ,மனதாலும் அவமதிக்காது கற்ற கல்விக்குச் சான்றாய் உண்மையாய் இருந்தது என  பண்பாளனாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களின் எளிய வாழ்விற்கு நான் தலை வணங்குகிறேன் நண்பா...
உங்களின் கலை இலக்கியப் பணிகள் இப்போதுபோலவே எப்போதும் தொடரட்டும் நண்பா...நான் என்னையறியாது செய்த தவறுகளுக்கு பொறுத்தருள்க நண்பா...
நீங்கள் காணவேண்டிய உயரம் உங்கள் மிக அருகிலேயே இருக்கிறது...மணப்பாறையின் வரலாற்றை யாரேனும் இன்றைய தேதிக்கு எழுதத் தொடங்கினால் இளங்கோ மன்றத்தையும் , கவிஞர் ஜீவிதனையும் , பாரதி கனகாராஜையும் தவிர்க்க முடியாது நண்பா. இன்றைய தேதிக்கே தவிர்க்க முடியாது என்றால் நாம் இறப்பதற்குள் இன்னும் நம் மண்ணுக்கும் மக்களுக்கும் எவ்வளோ செய்யலாம் .  தமிழ்நாட்டின் வரலாற்றிலும் நாம் இடம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை...

எப்போதும் "வணக்கம் வணக்கம்" என்று அலைபேசியில் உங்கள் உரையாடல் தொடங்கும் " தேங்க் யூ தேங் யூ " என்று வெள்ளக்கல் பிரிவில் உங்கள் உரையாடல் முடியும். உங்கள் அன்புக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நண்பா. உங்களைப்போல வாழ முயற்சி செய்கிறேன் . பொது முடக்கம் விலகி எல்லாம் சீராகும் நாளில் நமது சச்சின் கிச்சனில் சந்திப்போம் நண்பா....

உங்களுடனான நட்பின் தருணங்களை எழுதிட முயன்றேன் ஏதேதோ எழுதிவிட்டேன்...நீங்கள் அனுப்பிய அந்த சுஜாதா படைப்புலகம் தொடர்பான கதையை படித்துமுடித்து உங்களிடம்தான் பேசவில்லை. எல்லா நண்பர்களிடமும் பேசிவிட்டேன். உங்களுடைய பென்னியின் செல்வன் நாவலை இன்னமும் படித்து உங்களிடம் கருத்து பகிராமைக்கு வருந்துகிறேன். சிரமம் பொருத்தருள்க நண்பா. கி.ரா.கதைகள் படிச்சிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.? , இந்தத் தடைக்காலத்தில் ஒரு 10 புத்தகங்கள் படித்து முடித்தேன், 20 திரைப்படங்கள் பார்த்தேன் சந்திக்கும்போது சொல்கிறேன்..

தன் விருப்பப்படி நேர்மறையான எண்ணங்களோடே தன் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழும் நண்பர் ஜீவிதனுக்கு GV Than இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...வானம் உமதே....நின் கதைகளாலும் எழுத்தாலும் நின்று வாழ்வாய் நண்பா.வாழிய நின் புகழ்.

நட்புடன் 

பாரதி கனகராஜ்
05.05.2020.
@ 19.34
கோட்டூர்புரம் , சென்னை.

Comments

Popular Posts