விட்டு விடுதலையாகும் வேட்கை

"கட்டுபடியாவதைக் 
காட்டும் வாழ்க்கை
விட்டுவிடுதலையாவது 
அவரவர் வேட்கை"
- கல்யாண்ஜி

நினைத்தமாதிரியெல்லாம் அப்படியே நம் வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நிறைய திட்டமிடுதல்களோடும், நமக்கே உரித்தான சில விதிகளுக்கு உட்பட்டு வாழ்வை அமைத்துக்கொள்ள எத்தனிக்கிறோம். ஆனால், எல்லாப் பொழுதுகளிலும் விதிமீறல்களாலேயே அது நிரம்பி வழிகிறது. சில நேரஙகளில் நிலைகுலைந்துபோகும் அளவுக்கு நம்மைக் கலைத்துப் போட்டுவிடுகிறது. மீண்டுவெளியேவரமுடியாமல் ரொம்பவே சிக்குண்டுபோகிறோம். 

அதுவும் எதிர்பாராத தருணங்களில் திடீரென ஏற்படும் மரணங்களால் நமக்கேயான முதன்மையான மனிதர்களை நம்மிடமிருந்து பறித்துக் கொள்கிறது. 
நேற்று வரைக்கும் நம்முடன் இருந்த மனிதர்கள் திடீரென இல்லாமல் போகும்போது அது உண்டாக்கும் அதிர்வுகளும், வலியும், நம்மை அமைதி இழக்கச் செய்கிறது.  

எத்தனை பக்குவப்பட்டவர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள முனைந்தாலும், நாம் அவ்வளவெல்லாம் பக்குவப்படவில்லை என்பதையே திரும்பத் திரும்ப உணர்த்திப் போகிறது. சரியாகத்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், ஏதோவொரு துரோகம் நம் சரி, தவறுகளுக்கு துயரமானதொரு முடிவை எழுதிப் போகிறது. 

இந்த உலகம் அத்தனை அழகானது. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் ரொம்பவே நம்பிக்கைக்குரியவர்கள் என்ற உணர்வையே நாம் பெற வேண்டுமென மனம் ஆறுதல் கொள்கிறது. மனம் புண்படும்படி செய்துவிட்டு, பேசிவிட்டு எப்படிச் சிலரால் மிக இயல்பாக நம்மைக் கடந்துபோக முடிகிறது, மீண்டும் உறவாடமுடிகிறது என்பது நமக்கே வியப்பைக் கூட்டுகிறது. 

யதார்த்த உலகமும் சில நேரஙகளில் யாதெனப் புலப்படாத நிறைய புனைவுகளால் சூழப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் எனக்கு வள்ளுவரின் திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்துபோகும். 

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.ம்ணியரசன் பேசுகையில் ஒன்றைக் குறிப்பிட்டார். தமிழர்களுக்கென்று தொன்றுதொட்டு மாறாத பண்பு நலன்களாக மூன்றைச் சொன்னார். அது அறிவாற்றல், வீரம், அறவுணர்வு என. களத்திலே துப்பாக்கி தூக்கிப் போராடுவது மட்டும் வீரமல்ல, எத்தனை இடர்வரினும் தாம் கொண்ட கொள்கைக்காக வழுவாது வாழ்வு நெடுக்கப் பயணிப்பதும் வீரமேயாகும். 

நாம் கண்டு வியந்த சான்றோர் பலறது அறிவாற்றலும், அறஉணர்வும்தான் நாம் வாழ விரும்புகிற வாழ்வை வாழச் சொல்லி உந்தித் தள்ளுகிறது. நாம் இயல்பாகக் கடந்துபோகிற எளிய மனிதர்கள் பலரும் தமக்கென அறவுணர்வை ஆழமாக் பற்றிக்கொண்டு நகர்வதை பார்க்கிறோம். மெத்தப்படித்து, மினுக்கிக்கொண்டு திரியும் பலரும் அடிப்படை அறஉணர்வு இழந்து, போலிகளாக நம்முன் பல்லிளித்துத் திரிவதையும் பார்க்கிறோம். 

வேல.ராமமூர்த்தியின் "சிப்பி" என்கிற கதையில் ஓரிடத்தில் அந்தப் பெண் கேட்பாள். சக்கிலிச்சின்னா என்ன சோத்தையும், பீயையும் பிணைஞ்சி சாப்புட்றவங்கண்ணு நினைச்சீகளோ என. அப்படித்தான் பலர் நம்மை நடத்துகிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அப்படியான மனிதர்கள்மீது கோபம் வருகிறது. 

நம் முன்னோர்கள் சொன்ன வாக்கையே திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறோம். நான் எவனுக்குக்கும் அடிமையில்லை. எனக்கு எவரும் கீழானவரில்லை. அந்த்ச் சமநிலை உணர்வை, மான உணர்வை எப்போதும் தற்காத்து நகரவே மனம் விருப்பம் கொள்கிறது.

25.09.2023 
சொக்கலிங்கபுரம், மணப்பாறை. 

Comments

Popular Posts