எங்கே போனது என் நதி?

எங்கேபோனது என் நதி?

.................
அன்று
குட்டிப்பிள்ளையாய்
நானிருந்தேன்

மழைவரும் வேளையில்
வானம் இரசிப்பேன்

பெருகிப் பெய்யும் மழைக்கு
முகம் கொடுப்பேன்

என் சிரிப்பைக்கண்டு
இன்னும் அதிகமாய்
மழை பொழியும்

எம் வீட்டுக் கூரையில்
வடிந்து ஒழுகும்
மழைநீரிலும்
ததக்குப் புதக்கென்று
ஆட்டம் போடுவேன்.

அம்மா எப்பவும் போல்
"சளிப்புடிக்கும்
காய்ச்சல் அடிக்கும்
சொன்னாக் கேளு " என
அதட்டிடுவாள்

அப்பாவோ சினேகமாய்
என்னோடு சேர்ந்து நனைந்து
காகிதக் கப்பல் செய்துதருவார்

அப்பாவிடம் கேட்பேன்
"அப்பா அப்பா
நம்மலோட கப்பலு
எதுவரைக்கும்ப்பா போகும் " என

"நம்மூரு சின்னச்சின்ன ஆத்துல ஓடி
புங்காத்துல கலந்து
அப்புறமா வைகை ஆத்துத் தண்ணியில
மிதக்கும் " என்பார்

இப்போதெல்லாம்
அப்பா எனக்கு
காகிதக் கப்பல் செய்து தருவதில்லை
நானும் என் நதியில் கப்பல் விடுவதில்லை.

மழைக்கு என்மீது
என்ன கோபமோ
வர மறுக்கிறது

கள்ளழகர் ஆற்றில் இறங்கவே
செயற்கைநதி தேவையாகிப்போனது

காலத்தின் நதிக்கரையில்
ஈரம் அப்பிய நினைவுகளில்
மீண்டும் நான்
காகிதக் கப்பல் விடுவது எப்போதோ?

கல்லும் முள்ளும் சேர்ந்து குத்தும்
எங்க ஊரு ஆற்றில்
மூழ்கி மூச்சடக்கி
உடம்பெல்லாம் ஈரம் சிலிர்க்க
என் பால்ய சிநேகிதிகளோடு
நீச்சலிடிப்பது எப்போதோ?

#பாரதிகனகராஜ்

23.08.17
07.45 pm

Comments