புத்தகவாசத்தில் துயில் கொள்வேன் நான்




என்னிடம் ஒரு நல்ல பழக்கமுண்டு செல்லும் இடமெங்கும்  நான் சந்திக்கும் எல்லா மனிதர்களிடமும் என்னைவிட்டு அகலும்போது அவர்கள் கைகளில் ஒரு புத்தகத்தை திணித்து அனுப்புவேன்.அதை ஏன் பண்றேன் எதுக்குப் பண்றேன்லாம் தெரியாது.ஆனா அப்டி பண்ணனும்னு தோணிட்டே இருக்கும். என் வீட்டுக்கு வந்த நண்பர்களை நான் ஒருநாளும் வெறுங்கையோடு அனுப்ப மாட்டேன். அவர்களை என் வீட்டு புத்தக அறைக்கு அழைத்துச் சென்று ஏதேனும் புத்தகங்களைக் கொடுத்து அனுப்புவேன்.
என் ஜோல்னாப் பைக்குள் சாலையில் எதிர்ப்படும் ஒரு நண்பனுக்கு வாசிக்கத் தருவதற்காய் எதற்கும் இரண்டு புத்தகங்கள் எப்போதும் கூடவே இருக்கும். இப்படி புத்தகங்களை காசுகொடுத்து வாங்கி படித்துவிட்டு அதை இன்னொரு நண்பனுக்கும் கடத்த வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் மலர்ந்து 10 ஆண்டு ஆகிறது. நான் திருச்சி  தூய வளனார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது தில்லைநகர் மக்கள் மன்றத்தில் போடப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே வாங்கிவந்த இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்கிற கவிதைப் புத்தகத்தை படித்து முடித்தவுடனே அடுத்தநாள் என் கல்லூரி நண்பன் ஜாக்சனிடம் சென்று அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்..அவனிடம் அந்நூலை படிக்கத் தந்து அனுப்பினேன். படித்துவிட்டு என்னைப்போலவே என்னிடம் வந்து சிலாகித்துக் கொண்டிருந்தான்.எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது அதுதான் நான் காசு கொடுத்து வாங்கி சொந்தமாக்கிக் கொண்ட ஒரு நூலை பிறருக்கு வாசிக்கத்தரும் இன்பத்தை அப்போதுதான் முதன்முதலில் உணர்ந்தேன்..
பிறகு சென்னை வாழ்க்கையில் பகுதிநேரப் பணிசெய்துகொண்டு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அண்ணா நகர் பழைய புத்தகக் கடைகளிலும் , திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளிலும் மனசு வருத்தமாய் இருப்பதாலேயே உணவு உண்ணப் பிடிக்காமல் இருகின்ற காசுக்கெல்லாம் புத்தகங்களை வாங்கி வரத்தொடங்கிய கதைகள் ஆரம்பித்தன. இப்படியான தேடலில்தான் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம், கே.கே.நகர் டிஸ்கவரி புத்தக நிலையம் , தியாகராய நகர் நியூ புக் லேண்ட், மைலாப்பூர் பரிசல் புத்தக நிலையம்( இப்போது திருவல்லிக்கேணி), அண்ணா சாலையின் ஹிக்கின் பாதாம்ஸ், விகடன் பிரசுரம் அலுவலகம், தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயம், திருவல்லிக்கேணி காலச்சுவடு பதிப்பகம் என புத்தகங்கள் விற்பனையாகும் கடைகளுக்கு படை எடுக்கத் தொடங்கினேன்.


ஒவ்வொரு கடைக்குச் செல்லும்போதும்  மருத்துமனையின் பிரசவ வார்டுக்குள் நுழைவதுபோல் ஒரு இனம்புரியாத வாசத்தை உணரத் தொடங்கினேன். நிறைய புத்தகங்களை எடுத்து எடுத்துப் பார்த்துவிட்டு சற்று விலை அதிகமென்று அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவேன். மைலாப்பூர் பரிசலில்தான் முதன்முதலில் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் சாரின் "தீராக் காதலையும் " நாம் நனைந்த மழைத்துளியில் நூலையும் வாங்கிவந்தேன். ஒருமுறை சென்னை வாழ்க்கையையே வெறுத்துப்போய் " நான் கோழை கனகராஜ் நான் வாழவே தகுதியில்லாதவன், இந்தச் சென்னை எனக்கு வேணாம்,நான் மணப்பாறைக்கே போறேன் " என்று ஒரு நண்பன் எனக்குப் போன் செய்து அழத்தொடங்கினான். ஊருக்குச் செல்ல கோயம்பேட்டில் தயாராய்  இருந்த அவனை அப்படியே இருடா என்று சொல்லிவிட்டு அண்ணா நகரிலிருந்து என் சைக்கிளில் அவனைக் காணச் சென்றேன்.
அன்று அவனோடு கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நான்கு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி அவன் காதல் தோல்விக் கதைகள், குடும்பக் கடன், அக்கா திருமணம், பறிக்கப்பட்ட வேலை என எல்லாம் கேட்டு அவனை பேருந்து நிலைய வாசலில் இருந்த புத்தகக் கடைக்கு அழைத்துப் போனேன்..எர்னஸ்டு ஹெமிங்க்வேயின் " கடலும் கிழவனும் " நாவலையும் , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் வாழ்கிறார் நூலையும் வாங்கிக் கொடுத்து இப்போது நீ ஊருக்குச் செல்லவேண்டாம் நண்பா. நீ தொடர்ந்து வேலைகளைப் பார்.இந்தப் புத்தகங்களைப் படி என்றேன்.
வீடு திரும்பிய அவன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கடலும் கிழவனும் நாவலை படித்துமுடித்துவிட்டு மன நிறைவோடு நான் ஊருக்குப் போகல கனகராஜ் என்றான்.
அதன்பிறகு நானும் அவனும் எத்தனையோ புத்தகங்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். பின்னர் அவன் பெங்களூர் சென்றுவிட்டான் .அவன் வாழ்க்கை மாறிப்போனது. வருடத்திற்கு ஒருமுறை எப்போதாவது போன் செய்வான். அவன் ஒருமுறை போன் செய்து தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஆண்டன் செகாவைப் பற்றிப் பேசியதால் தன்னை மிக உயர்வாக பிற மாநிலத்து நண்பர்கள் மதித்ததாகக் கூறினான். எனக்குள் சின்ன நிறைவு இருக்கத்தான் செய்தது.

சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ்.தேர்வுகளுக்காக தயாரகிக் கொண்டிருந்த நாட்களில் எம்.ஜி.ஆர்.காலணி என்ற தெருவில் வசித்து வந்தேன். அப்போது அந்தப்பகுதியில் திருச்செந்தூரிலிருந்து வந்து தன் அக்காவின் பெயரில் "முத்துலெட்சுமி ஜூஸ் கடை" வைத்திருக்கும்  என்னைவிட வயதில் மூத்த பெருமாள் எனக்கு நண்பரானார். முத்து அண்ணனும் நானும் மொதல்ல அறைத்தோழர்களா இருந்தோம் பிறகு அண்ணன் வேலை கெடச்சி போய்ட்டாங்க.நான் மட்டும் தனியாக அந்த கருப்பாயி ஆயா வீட்டின் மேல்மாடியில் வசிக்கும்போது ஒருவித விரக்தி என்னையே கவ்வும்..அப்போது ஜூஸ் கடை பெருமாளிடம் நான் படிச்ச புத்தகங்களைப் பற்றி எல்லாம் பேசுவேன். அப்படியே அவருக்கு "அணிலாடும் முன்றிலையும்" ஆர்.முத்துக்குமார் எழுதிய "அம்பேத்கர் வாழ்க்கை வரலாறையும்"  டாக்டர் ஷாலினியின் " "அர்த்தமுள்ள அந்தரங்கம் " நூலையும் வாசிக்கத் தந்தேன்.
அம்பேத்கரை வாசித்துவிட்டுவந்து "அம்பேத்கரு இவ்ளோ நல்லவரான்னே" என்று கேட்டார். அணிலாடும் முன்றில் படிக்கையில் கண்ணீர் விட்டு அழுததாய் சொன்னார். தன் அத்தைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் பேசிய விசங்களை நிறைய தன் வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்த்துட்டு ஒடனே அழைத்துப் பேசுவார். புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துப்போய் புத்தகம் வாங்கித் தருவேன். அப்படித்தான் அமைந்தகரை ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.. ஓடிப்போய் இறையன்பு ஐ.ஏ.எஸ் சிடம் ஒரு புத்தகத்தை நீட்டி ஆட்டோகிராப் வாங்கத் தொடங்கிவிட்டார்..
பெருமாளுக்குள் ஒரு புத்தக ஆர்வத்தை விதைத்ததில் நான் மனம் நிறைந்திருக்கிறேன்..பள்ளிப்படிப்பையே பாதியில் நிறுத்தியவனை வாசிக்க வைத்ததற்காய் பல நேரங்களில் பெருமாள் எனக்கு தன் ஜூஸ் கடையில் ஓசியில் இரண்டு ப்ரூட் மிக்சர் தருவார். உழைப்பால் உயர்ந்த ரொம்ப நல்ல  இளைஞன் அவர்.அதன்பிறகு பெருமாள் தானே பழைய புத்தகக் கடைகளில் புத்தகம் தேடி வாசிக்க ஆரம்பித்தார். சிறு வதிலேயே தாயை இழந்து வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தூத்துக்குடியில் ஜூஸ் கடையில் வேலை பார்த்து, அந்த அனுபவம்கொண்டு சென்னைக்குப் பிழைக்கவந்து தான் வேலை பார்த்த கடைக்கே முதலாளியும் ஆகி, தன் மூன்று அக்காக்களை கட்டிக்கொடுத்துவிட்டு இன்று அண்ணா நகரிலேயே  இரண்டு ஜூஸ் கடையாக விரிவுபடுத்தி முட்டிமோதி முன்னேறிய அந்த 29 வயது இளைஞன் ஜூஸ்கடை பெருமாள் எனக்கு நம்பிக்கையின் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
சமீபத்தில் போன் செய்திருந்தார்.திருமணம் ஆகிவிட்டதாகவும் பொண்ணு பி.காம் படிச்சிருக்குறதாவும் சொன்னாரு...எனக்கு அண்ணன் வயதில் இருந்துகொண்டு எப்போதும் என்னை அண்ணன் அண்ணன் என்று அழைக்கும் பெருமாளை "நல்லாருங்க பெருமாள்" என்று வாழ்த்தினேன்...

மணப்பாறையில் கடந்த இரண்டாண்டுகளில் இளங்கோ மன்றம் என்ற வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி நிறைய பேரை வாசிக்கவைக்க முன்றிருக்கிறேன்..இதுவரை 65 கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன். மணப்பாறை மண்ணுக்கு நான் மீண்டும் வந்தபோது 8 ஆண்டு இடைவெளி விட்டிருந்த நண்பன் சீனி என்னைத் தேடி வந்தான். அவனுக்குள் மீண்டும் வாசிப்பு நெருப்பை மூட்டினேன்.இன்று ஒரு நாவலாசிரியராகிவிட்டான். மிக நன்றாக எழுதத் தொடங்கிவிட்டான். சமீபமாய் என் வீட்டுக்கு வந்த நண்பன் சீனி "ஓமன் செல்கிறேன் வர 8 மாசம் ஆகும் படிக்க சில நூல் தா "என்றான்.
எழுத்தாளர் ஜெயந்தன் கதைகள் தொடங்கி, வெண்ணிர இரவுகள், இமையத்தின் எங்கதெ, அசோகமித்திரன் சிறுகதைகள்,  நாஞ்சில் நாடன் நாவல் வரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறான்..எனக்குத் தெரியும் அவன் அவற்றை மட்டுமே படித்து முடித்தாலே முழுக் கலைஞன் ஆகிவிடுவான்.அவன் வாசிப்பை அவ்வளவு நேசிக்கிறான்.
இப்படி என் வட்டத்தில் நிறைய பேரைச் சொல்லலாம்.என் பதினைந்து ஆண்டுகால நண்பன் நாகமணி, மாரி யுவராஜ் மாமா, நண்பன் பாலா,காமராஜ் , குமரேசன் அண்ணா, தோழிகள் கவிமணி, ராஜி, கார்த்திகா, உஷா, அனு , அஷ்டா பாப்பா ,தம்பிகள் ஆரோக்கிய ஜெகன், சல்மான், பிரதீப் என அந்தப் பட்டியல்கள் நீளும்.
ஆனால் நான் பலரின் வாசிப்பைக் கண்டு மிரண்டிருக்கிறேன்.அவர்களோடு சேரத் தொடங்கியதும் நான் வளரத் தொடங்கினேன். தமிழ்மணி அண்ணா, கவிஞர் ஜீவிதன், கவிஞர் தோகை பழனிவேல் , தோழர் முத்து இருளப்ப குமார் , நிலாமகன் அண்ணா,  தோழர் இரா.த.கண்ணதாசன், நண்பன் இளமாறன் , சிந்தனைச் செல்வன் சாலமன்ராஜ், தோழர் அசுரன் சங்கர்,  கவிஞர் சே.சுப்ரமணியன் வளநாடு, மிகாவேல் அண்ணன், வி.பொன்வாசிநாதன் அண்ணா ஆகிய தமிழ்ச் சான்றோர்களே அவர்கள்.


புத்தகங்களோடு படுத்துறங்குவதும், புத்தக வாசத்தில் துயில் கொள்வதும் ,அவற்றை தூக்கிக் கொண்டு திரிவதும், அவற்றைப் பற்றி தேனீர்க் கடைகளில், பேருந்து நிறுத்தங்களில் ,ரயில் பயணங்களில் உரையாடுவதை ஒரு பேரின்பமாகக் கருதுகிறேன் நான்.
புத்தகங்களை வாங்கிச் சென்றுபோன பல நண்பர்கள் அதன்பிறகு ஆள் அடையாளமே இல்லாமல் போய்விடுவார்கள். எனக்கு வருத்தமெல்லாம் "  அவர்கள் ஒரு போன் செய்து நான் கொடுத்தனுப்பிய அந்த நூலிலிருந்து ஒரு வரியைச் சுட்டிக்காட்டி அது நல்லா இருந்துச்சு என்று சொல்லி விட மாட்டார்களா என்பதாகவும், ஒட்டுமொத்த நூலைப் படித்துவிட்டு எனக்கு யாரேனும் கடிதம் எழுதிவிட மாட்டார்களா என்பதாகவுமே இருக்கிறது.
அவர்கள் அப்படி அந்தப் புத்தகங்களைப் பற்றி என்னிடம் ஏதும் பேசாதிருக்கிறபோது நான் மிகவும் தோற்றுப்போனவனாய் உணர்கிறேன்.
"எம்புள்ள அஞ்சு மொழி பேசனும்னு "பஸ்டாண்டுல யாரோ வித்த 10 ரூவா புத்தகத்த வாங்கிட்டு வந்து கொடுத்த அப்பா ,பேருந்தில் யாரோ விட்டுவிட்டுப் போனதாய் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் நூலை வாசிக்க கொண்டுவந்து தந்த என் அப்பா வைரப்பெருமாளை நினைத்துப் பார்க்கிறேன்..
- பாரதி கனகராஜ்
25.11.2019
@ 20.26

Comments

Popular Posts