கடவூர் உள்மாகாணம்



கடவூர் உள்மாகாணம் ஒரு வறட்சியான பகுதி, ஊரே வெள்ளம்னு சேதி படிச்சாலும் இந்த ஊர்ல மட்டும் பொட்டுத் தண்ணிய கண்ணுல பார்க்க முடியாது. குடிக்கக் கூட தண்ணி இல்ல கேணியில, நெலம் மட்டுமில்ல எங்க ஊரு மக்க மனுஷா முகமும் வறட்சி தட்டிப்போய் வாடியே கிடக்கிறது.

எள வயசுப் பசங்கல்லாம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், ஹைதராபாத்துக்கும் பைனான்ஸ் கடைகளுக்கு வேலைக்குப் போய்ட்டாங்க. என் வயசுப் பசங்க எல்லாருமே இப்ப ஊர விட்டு வெளியிலதான் இருக்கோம்... உள்ளூர்ல இருக்குற பொம்பளையாளுங்க எல்லாம் ஊருக்குள்ள தெனமும் வந்து போற 25 மில்லு வண்டிகள்ல கரூருக்கும் வேடசந்தூருக்கும், வடமதுரைக்கும் நைட்டு பகல்னு வேலைக்குப் போய்ட்டு வர்றாங்க. மிச்ச மீதி இருக்குற வயதான முதியவர்களும் , என் அம்மா வயதுப் பெண்களும்  நூறு நாள் வேலைக்குப் போய்விடுகிறார்கள் ....

2000 தென்ன மரம் வெச்சிருந்த ஆறுமுக வாத்தியார் தோட்டம், பொன்னாக்கவுண்டர் பொன்னுச்சாமி தோட்டத்து 1000 தென்னை மரம், ராசப்ப கோனார் அப்பா தோட்டத்துல ஒரு 2000 மரம்,  ரைஸ் மில்லுக்காரரு பாலகிருஷ்ணன் அப்பா தோட்டத்துல ஒரு 1500 தென்ன மரம்,  400 தென்னமரம் வெச்சிருந்த அரிகிருஷ்ணன் மாமா தோட்டம் என எல்லாம் இப்ப சுத்தமா காஞ்சிபோச்சு ....
24 மணி நேரமும் தண்ணி ஓடிட்டே இருக்குற அய்யாத்துரை மாமா தோட்டத்துலயும், பல்ராமன் மாமா தோட்டத்துலயும் இன்னக்கி பொட்டுத் தண்ணி வரல.

ஊரே குளிச்சு துணி தொவைக்குற மணியார் வீட்டுத் தோட்டத்தில சுத்தமாவே இப்பத் தண்ணி வரல .... மணியார் வீட்டுப் பெரியாளு என் வீட்டு மாடியில இருந்து அவர் தோட்டத்தக் காமிச்சு "அங்க பாரு தம்பி எப்டி இருந்த தோட்டம் சுடுகாடு மாறி கெடக்குது " அப்டின்னு சொன்னாரு... உண்மைலயே அன்று  அந்தக் காட்டை நான் பார்த்தபோது சுடுகாடு மாதிரிதான் இருந்தது.

நம்ம தோட்டத்திலயும் தண்ணி இல்ல... வானம் பார்த்த பூமி .... இந்த வருஷமாச்சும் மழ பெய்யும்னு நம்பி , வெத போட்டு , நெலத்த உழுதுபோட்டு, மழைக்காக காத்திருந்தோம்... கஜா புயல் வந்தப்ப கடவூர் உள்மாகாணமும் கடுமையான பாதிப்புக்கு ஆளாச்சு .... ஆனாலும் பேஞ்சுட்டுப்போன கொஞ்சூண்டு மழைல மிஞ்சிப்போன ஈரத்துல  ஏனோ தானோன்னு நம்ம காட்ல போட்ருந்த சோளத்தட்ட , உளுந்து, கொத்த மல்லி, கொள்ளு, தட்டப்பயிருனு மொளச்சது... எல்லாம் இப்ப நட்டம் ...

அன்னக்கி நானும் அம்மாவும் காட்ல மல்லி பிடுங்கிட்டு இருந்தப்ப "என்னமா, வெள்ளாமை வச்சு நாம பாழாப் போறதுடா தம்பி " என்று அம்மா வெசனப்பட்டாள்.

5 ஏக்கர் நெலத்துல மழைய மட்டும் நம்பி வெத போட்டு , வெதைக்கு, உழுதது, களை எடுத்தது, அறுப்புக் கூலி , எல்லாம் சேர்த்து 25000 க்குப் பக்கம் செலவுன்னு  அம்மா சொல்லுது ....
இன்னக்கி தோட்டத்துல  இயந்திரத்த வெச்சு மல்லி, கொள்ளு அடிச்சோம்... ஒன்னே கால் மூட்டை மல்லி கெடைச்சிருக்கு, கால் மூட்டை கொள்ளு, தட்டைப் பயிறு சுத்தமா கருகிப் போச்சு...இனி கைக்கு மிஞ்சுறது ஒரு 5000ம் கூட கெடைக்குமான்னு தெரியல...

அம்மா சொன்னது என்னமோ சரிதான்
"என்னமா, வெள்ளாமை வச்சு நாம பாழாப் போறதுடா தம்பி "
ஜெமினி அண்ணன் சொல்றாரு
"உழுதவன் கணக்கு பார்த்தா ஒலக்குக்குக் கூட மிஞ்சாதாம்."

-பாரதி கனகராஜ்
24.01.2019 @ 06.44 pm

Comments

Popular Posts