மனுஷ்யபுத்திரனின் அறிமுகம்


சமீபகாலமாய் என் தனிமையை ஒரு நண்பனைப்போல உடனிருந்து ஆசுவாசமளிப்பது

மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்

மணப்பாறையில் ஆர்.எம்.ஆர் புத்தக கடையும்

திருச்சி ரயில் நிலைய புத்தகக் கடையும்

மணப்பாறை கிளை நூலகமும்,ஷெனாய் நகர்
கிளை நூலகமும் அண்ணா நூற்றாண்டு நூலகமும்தான் 
உயிர்மையோடான எனது உறவை  பலப்படுத்தின...

 "உயிர்மை" என்னுள் அறிமுகமான  2011 முதல் நான் வாங்கிய
இதழ்களை எல்லாம் என் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

உயிர்மை கையில் வந்தவுடன் முதலில் வாசிப்பது மனிஷ்யபுத்திரனின் தலையங்கம்தான்

தொடக்ககால வாசிப்பில் அப்போது அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்தது...அவர்பற்றிய விமர்சனங்களை முன் வைத்தார்..

உயிர்மை இதழ் தொட்ட அடுத்த கணமே அவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கும் நடுப்பக்கத்தை நோக்கி என் கண்கள் நகரத் தொடங்கும்....

பேருந்துப் பயணங்களில், நண்பர்கள் வீட்டு விசேசங்களுக்கு எழவு வீட்டுக்கு என எங்கு சென்றாலும் உயிர்மை என் உடனிருக்கும்..

சுந்தர ராமசாமி என்று ஓர் எழுத்தாளரை ,செகாவ் வாழ்கிறார் எஸ்.ராவின் தொடர், இப்படியாய் பல இலக்கிய ஆர்வத்திற்கான ஈர விதைகளை  என்னுள் விதைத்து
சின்னச் சின்னத் தேடல்களை
உயிர்மை உருவாக்கியது..

சென்னைப் பெருவெள்ளத்தின்போது அவரெழுதிய "ஊழியின் தினங்கள்"
அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளியாகும்  கவிதைகள்

இடமும் இருப்பும், "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" மணல்வீடு ஆகிய அவரது தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன்...

"என்பிலதனை" என்ற கவிதையில் வெளிப்படும் அன்பு அவ்வளவு பிடிக்கும் அதோடு ஒப்பிட்டு என் சுற்றத்தாரின் அன்பில் நனைவேன்...

1992 இல் எழுதிய "மனித ஜென்ம பூமியில்" என்ற தலைப்பிலான  அவருடைய கவிதை

"பாபருக்கு 
வேண்டும் மசூதி

ராமருக்கு
வேண்டும் கோயில்

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான கழிப்பறைகள்  "

என்று இன்றைய ஆப் கே மோடி சர்க்காரின் "சுவச் பாரத்" திட்டங்களை கழிப்பறை அவசியத்தை அவருக்கே உரிய எள்ளல் தொனியில் அன்றே பேசியிருக்கிறார்...

"நெஞ்சு பூத்து
நீ அனுப்பிய 
சிறியதொரு பரிசு

இங்கே உருவாக்குகிறது
உன்னைவிட அதிகமாய்
உன் இருத்தலை.."
(1992)

அவரது கால்களின் ஆல்பம் கவிதையில் வரும் கால்களில் மயானத்திலிருந்து திரும்பும் கால்கள்

நேசித்தவரை காணச் செல்லும் கால்கள்
பெருவிரல் இரண்டையும் சேர்த்துக் கட்டிய கால்களை நான் ஆல்பம் எடுத்து வைத்திருக்கிறேன்...

அவ்வளவு தொந்தரவு செய்கின்றன..

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளோடு பயணிப்பது ஓர் அழகிய அனுபவம்

அவருடைய கவிதைகளை நண்பர்களோடு பகிர்வது பேரானந்தம்...

இப்போது அவரை முகநூலில் பின் தொடர்கிறேன்..

சுடச்சுட இங்கே வடை கிடைக்கும் என்பதுபோல் அவர் எழுதி முடித்த மறுகணமே அவரின் கவிதைகளை வாசித்துவிடமுடிகிறது..

"நம் சினேகிதிகளுக்கு திருமணமாகும்போது"

"கொஞ்சம் பார்த்துக்கோங்க" என்ற அவரது சமீபத்திய முகநூல் கவிதைகளை பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிலாகித்திருக்கிறேன்...

தமிழ் கவிதை வரலாற்றில்
இது

எனக்குத் தொழில் கவிதை என்று வாழும் மனுஷ்யபுத்திரனின் காலம்..

வாசக சாலை நிகழ்வில் அவர் கவிதைகள் குறித்த படைப்புலக அதிசயங்களை விவாதித்து கேட்டு ரசிக்க உங்களோடு நானும் காத்திருக்கிறேன்...

25.05.2017

Comments

Popular Posts