கண்ணதாசன்



கண்ணதாசன் என்ற இந்தப் பெயரை எல்லோரும் ஒரு கவிஞர் சினிமாப் பாடலாசிரியர் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்போம்..

2008 இல் மணப்பாறையில் நான் பதினோறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன்  என்ற பெயரில் ஒரு நண்பன் கிடைத்தான்.

அவன் அப்போது மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனை முதல் முதலாக சந்தித்த போது அவன் பள்ளியின் மைதானத்தில் இரவு 10 மணிக்கு இயற்பியல் படித்துக் கொண்டிருந்தான்.

ஏசு அய்யாவும், ஜெயக்குமார் அய்யாவும், எபினேசர் சாருமே , கண்ணதாசன், கவிகோபி , கார்த்திக் மேனன் , சீனிவாசன், பிரபாகரன், தமிழ் கணேசன், கா.கி. கம்பீரன், தளபதி சூசை, அன்பு அண்ணா,  போன்ற உயிருக்கு இனிப்பான நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்வித்தார்கள்.

கண்ணதாசனை பின் மணப்பாறையில் ஓர் முக்கியப் பொதுக் கூட்டத்தில் சந்தித்தேன்...

தூரத்திலிருந்து ஒருவரை ஒருவர் இரசிப்பதுண்டு ஒரு சில அலைபேசி உரையாடல் தவிர அதிகமாய் பேசிக் கொண்டதில்லை...

வெள்ளக் குளத்தில்  ஒருமுறை பறைப்பயிற்சிக்காக நண்பன் கண்ணதாசன், இளமாறன், கார்த்திக் மேனன், தமிழ் கணேஷ், நாகமணி மாமா, என நாங்கள் ஏழு நாட்கள் அங்கேயே தங்கி பண்டைய  தமிழரின் வீரப்பறை  அடிக்கக் கற்றுக் கொண்டோம்...

பின் நாட்கள் நகர்ந்தோடவே கண்ணதாசனும் நானும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

நண்பனிடம் எனக்குப் பிடித்தது அவனது தமிழ் இன உணர்வும் மொழி உணர்வும் தான்.

இனிய தமிழில் பேசுவான். தீவிர புத்தக நேசன்.

நான் "வட்டியும் முதலும் " நூலைப் பற்றி முகநூலில் "என்னைப் புரட்டிப் போட்ட நூல் " என்று பதிவிட உடனே திருவான்மியூர்  பனுவலில்  அதைத் தேடித் தேடி அலைந்திருக்கிறான்.

புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட நண்பன் சமீபமாய் தீவிர அரசியல் செயல்பாட்டாளராய் தன்னை உருவாக்கிக் கொண்டு நடைபோடுகிறார்.

தமிழ், தமிழர் வாழ்வு, தமிழர் நலன், இதுவே என்றும் அவரது பேச்சாக இருக்கும்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சமீபமாய் நண்பன் கண்ணதாசனை சென்னையில் நேரில் சந்தித்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்போம்.



தற்போது நிறைய வாசிக்க முடியவில்லை எனக் குறைபட்டுக்  கொண்டார்.

சமீபமாய் நா.முத்துக்குமாரின் "பட்டாம் பூச்சி விற்பவன் " கவிதை நூல் வாசித்ததாய்ச் சொன்னார்...

அறச் சீற்றத்தோடும், தமிழரின் ஈராயிரம் ஆண்டு போர்க்குணத்தோடும் , தனக்கேயுரிய மென்மையான சிநேகப் புன்னகையோடும் நண்பன் எங்களை வரவேற்றுப் பேசினான்.

பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக்கொண்டான்..... அன்று முகம் நிறைய தாடியோடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தான்...

நெடுநாளுக்குப் பின் பழைய நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் அந்த அரிய தருணங்களை இருவரும் மெல்லிய சோகம் கடந்த மகிழ்வோடு கடந்தோம்.

கண்ணதாசன் இன்னும் ஒங்களோட நிறைய பேசணும்னு தோணுது...

இன்னொரு ஓய்வு நாளில் இன்னும் விரிவாய்ப் பேசலாம்...

தங்களது நெல்லிச் சாறு, இஞ்சிச் சாறு, இன்னும் தமிழர் உணவாலான பல விருந்து உபசரிப்புகளுக்கு என் அன்பின் ஆயிரம் முத்தங்கள் ....

- பாரதி கனகராஜ்

14.05.2018

Comments

Popular Posts