விட்டு விடுதலையாகும் வேட்கை
"கட்டுபடியாவதைக் காட்டும் வாழ்க்கை விட்டுவிடுதலையாவது அவரவர் வேட்கை" - கல்யாண்ஜி நினைத்தமாதிரியெல்லாம் அப்படியே நம் வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நிறைய திட்டமிடுதல்களோடும், நமக்கே உரித்தான சில விதிகளுக்கு உட்பட்டு வாழ்வை அமைத்துக்கொள்ள எத்தனிக்கிறோம். ஆனால், எல்லாப் பொழுதுகளிலும் விதிமீறல்களாலேயே அது நிரம்பி வழிகிறது. சில நேரஙகளில் நிலைகுலைந்துபோகும் அளவுக்கு நம்மைக் கலைத்துப் போட்டுவிடுகிறது. மீண்டுவெளியேவரமுடியாமல் ரொம்பவே சிக்குண்டுபோகிறோம். அதுவும் எதிர்பாராத தருணங்களில் திடீரென ஏற்படும் மரணங்களால் நமக்கேயான முதன்மையான மனிதர்களை நம்மிடமிருந்து பறித்துக் கொள்கிறது. நேற்று வரைக்கும் நம்முடன் இருந்த மனிதர்கள் திடீரென இல்லாமல் போகும்போது அது உண்டாக்கும் அதிர்வுகளும், வலியும், நம்மை அமைதி இழக்கச் செய்கிறது. எத்தனை பக்குவப்பட்டவர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள முனைந்தாலும், நாம் அவ்வளவெல்லாம் பக்குவப்படவில்லை என்பதையே திரும்பத் திரும்ப உணர்த்திப் போகிறது. சரியாகத்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், ஏதோவொரு துரோகம் நம் சரி, தவ...